நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 19) விசாரணை நடத்தினர்.
கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் நெல்லையில், ‘ஜல் நீட் அகாடமி’ என்ற கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறார். இங்கு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது. இதை சிசிடிவி கேமராவில் பார்த்த ஜலாலுதீன் மாணவர்களை பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மாணவர்களுக்கு கை, கால் மற்றும் முதுகுப்பகுதியில் ரத்தகாயம் ஏறப்பட்டுள்ளது.
அதேபோல, பயிற்சிமைய வாசலில் காலணிகளை முறையாக அடுக்காத காரணத்தால், மாணவி ஒருவர் மீது செருப்பை வீசி எறிந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வீடியோ வைரலான நிலையில், மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், நேற்று (அக்டோபர் 18) ஜல் நீட் பயிற்சி மையத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கண்ணதாசன், “மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்து விசாரித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அதேபோல, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெல்லை பயிற்சி மையத்தின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாணவ, மாணவிகளிடம் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
மாணவர்களுக்கு கோச்சிங் சென்டரில் உரிய வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா? நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்த முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? வீடியோ வைரலான பிறகு மாணவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை பயிற்சி மைய நிர்வாகிகளிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதுகுறித்து விரிவான அறிக்கையை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உங்கள் நாட்டுக்கு போங்கள்… தமிழரிடம் கனடிய பெண் இனவெறி பேச்சு!
தென்னகத்தை அச்சுறுத்தும் போதைப்பொருள்… டிஜிபிக்கள் மாநாட்டில் ஸ்டாலின்