மத்திய தேர்வாணையமான யு.பி.எஸ்.சி கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி 45 இணை மற்றும் துணை செயலாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது.
இதில் ‘லேட்டரல் என்ட்ரி’ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், என்றும், மத்திய அரசாங்கத்தின் ஊழியர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் யுபிஎஸ்சி செயலாளர்களைத் தேர்வு செய்யும் முறையில் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றாமல் இருப்பதை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ”சமூகநீதியை நிலைநாட்டவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும்.
- லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்; தகுதிமிக்க பட்டியல் – பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பதாகும். ஒன்றிய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், நியாயமான, சமத்துவமான முறையில் பதவிஉயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும்.
- தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற ‘க்ரீமி லேயர்’ முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் க்ரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும்.
- அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட – நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும் “என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திமுக எம்.பி.வில்சன் வெளியிட்டியிருந்த அறிக்கையில், ”ஆட்சேர்ப்பு செயல்முறையில் எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசன உத்தரவை யு.பி.எஸ்.சி, எப்படிப் புறக்கணித்துள்ளது என்பதற்கு யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள விளம்பரம் ஒரு சிறந்த உதாரணம்.
மொத்தமுள்ள 45 இணைச் மற்றும் துணை செயலாளர் பதவிகளில் குறைந்தது 22-23 விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப் படவில்லை” என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
முதல்வரின் முதன்மைச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்!
வங்கிக்கணக்குகள் முடக்கம் : தேவநாதன் கைது அப்டேட்!
ஹோட்டலில் சர்வர் வேலை பார்க்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை!
Comments are closed.