கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி விபத்தில் பலியான வழக்கில், பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெகபர் அலி. திருமயம் பகுதிகளில் நடக்கும் கனிமவள கொள்ளைகளை ஆதாரங்களுடன் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் மனு அளித்துவந்தார். இதனால் ஜெகபர் அலிக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில், கடந்த ஜனவரி 10-ஆம் தேதி புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கனிமவள கொள்ளை தொடர்பாக புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகபர் அலி, “திருமயம் தாலுகா தொலையானூர் பகுதியில், ஏராளமான சட்டவிரோத குவாரிகள் இயங்கி வருகிறது.

அதில் ஆர்.ஆர் என்ற ஒரு மிகப்பெரிய குரூப் இருக்கிறார்கள். அவர்கள் சமீபத்தில் 70 ஆயிரம் டாரஸ் லாரி கனிமங்களை வெட்டி ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர், கனிமவளத்துறை அதிகாரிகள், ஆர்டிஓ, டிஆர்ஓ ஆகியோரிடம் மனு அளித்துள்ளேன்.
டிசம்பர் 26-ஆம் தேதி தாசில்தாரிடம் மனு அளித்தேன். அதை தாசில்தார் கசியவிட்டதால், 40 லாரிகளில் இரவு பகலாக வெட்டி எடுத்த கனிமங்களை மீண்டும் குவாரிக்குள்ளேயே கொட்டி வருகிறார்கள்.
தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கொள்ளுங்கள், பத்து நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் மீதமுள்ள 30 ஆயிரம் லோடையும் அவர்கள் குவாரிக்குள் கொட்டி விடுவார்கள்.
நாங்கள் நேரடியாக தடுக்கப் போனால், 100-க்கும் மேற்பட்ட அடியாட்களை பயங்கர ஆயுதங்களுடன் வைத்திருக்கிறார்கள். அதனால் எங்களால் எதையும் செய்ய முடியவில்லை. இந்த விவகாரத்தில் மக்களை திரட்டி போராடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. வரும் ஜனவரி 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், ஜனவரி 17-ஆம் தேதி ஜெகபர் அலி திருமயம் பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் லாரி டிரைவர் முருகானந்தம் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், ஜெகபர் அலி மரணத்திற்கு பின்னால் உள்ள உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஜெகபர் அலி கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த திமுக அரசு. கனிமவள கொள்ளையர்கள், அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ”கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.
ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெகபர் அலி மரண விவகாரத்தை விசாரிக்க, இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் மணல், கற்கள் உள்ளிட்ட கனிமவள கொள்ளையை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெகபர் அலியின் குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லா, “ஜெகபர் அலி கொலை வழக்கில் துறை சார்ந்த அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்று இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் வேறு எவரும் பாதிக்கப்படாத வண்ணம் காவல்துறை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பூவுலகின் நண்பர் அமைப்பு, “தமிழ் நாட்டில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முற்படும் காவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்.
இது மிகவும் கண்டனத்திற்குரியது. கனிமவளக் கொள்ளை மாபியாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழ் நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கனிமவளக் கொள்ளை தொடர்பாக செயல்படும் அரசு அதிகாரிகள், செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: அதிபராக பதவியேற்கும் டிரம்ப் முதல் பரந்தூர் செல்லும் விஜய் வரை!