கடல் மீன்களில் நெய் மீன், ஷீலா, வஞ்சிரம் போன்றவற்றுக்கு எப்படி மவுசு இருக்கிறதோ… அதேபோல், கண்மாய் அல்லது குளத்து மீனில் விரால் மீனுக்குத் தனி மவுசு உண்டு.
விரால் மீன் குழம்புக்கு தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இந்த மீனை குழம்பு வைத்து சாப்பிடுவதைவிட ரோஸ்ட் செய்து சாப்பிடுவது கூடுதல் சுவையைத் தரும். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
விரால் மீன் – ஒரு கிலோ
பூண்டு – 30 கிராம்
இஞ்சி – 10 கிராம்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 15 கிராம்
கொத்தமல்லித்தழை – 5 கிராம்
மஞ்சள் தூள் – 5 கிராம்
சோம்பு – 3
சீரகம் – 2
மிளகு – 15 கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 20 கிராம்
எலுமிச்சைப்பழம் – அரை பழம் (சாறு எடுக்கவும்)
கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
மீன், எலுமிச்சைப்பழம் மற்றும் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு பிழியவும். நன்கு சுத்தம் செய்த மீனை, மசாலாவில் தோய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை பொன்னிறமாக வறுத்தெடுத்துப் பரிமாறவும்.