பாம்புக் கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பாம்புக் கடிக்கான விஷமுறிவு மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் பொள்ளாச்சியில் சாந்தி என்பவரைப் பாம்பு கடித்தது. ஆனால் அவருக்குச் சரியான விஷமுறிவு மருந்து கிடைக்காததால் உயிரிழந்தார்.
குறிப்பாகக் கிராமப்புறங்களில் வாழும் மக்கள், விவசாயிகள், குழந்தைகள் எனப் பலர் பாம்புக் கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். தமிழ்நாட்டில் இந்தாண்டு ஆரம்பம் முதல் கடந்த வியாழக்கிழமை(நவம்பர் 7) வரை 13,518 நபர்கள் பாம்புக் கடிக்கு உள்ளாகியுள்ளார்கள், அதில் 21 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அரசாங்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் முழுமையானது அல்ல, பாம்பு கடிக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் இதைவிட அதிகம் என்கிறார் தமிழ்நாடு பொதுச் சுகாதார கூடுதல் இயக்குநரான சம்பத்.
இதற்கிடையில் உச்ச நீதி மன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம், ஷைலேந்திர மணி திரிபாதி என்ற வழக்கறிஞர் ” இந்தியாவில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள் (PHC), சமூக சுகாதார நிலையங்கள் (CHC) மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் விஷமுறிவு மருந்து மற்றும் பாம்புக்கடி சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நவம்பர் 8ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ், தமிழ்நாடு அரசு பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் நவம்பர் 4, 2024 அன்று அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, இதற்கான அறிவிப்பை 6 நவம்பர் 2024 அன்று தமிழ்நாடு அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பாம்பு கடி இறப்புகளை குறைப்பதற்கான வரைபடம்
உலக சுகாதார அமைப்பு (WHO) பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகள் மற்றும் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப் பட்ட பாம்பு கடி விஷத்தைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டம் (NAPSE) ஒரு சுகாதார அணுகுமுறை மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் பாம்பு கடி இறப்புகளை பாதியாகக் குறைப்பதற்கான வரைபடத்தை உருவாக்கி உள்ளது. பாம்பு கடியால் அதிக பாதிப்பும் மற்றும் இறப்பும் ஏற்படுகிறது.
பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” மாற்றுவதன் மூலம், தரவு சேகரிப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் பாம்பு கடியால் இறப்பதைத் தடுப்பதற்கான விஷமுறிவு மருந்து வழங்குவதன் மூலம் சிகிச்சை மேம்படுத்தப்படும்.
பாம்பு கடி பற்றிய அறிவிப்பு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசுக்குத் தரவைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்குகிறது.
இது, தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கான விரிவான தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளுக்குப் பயன்படுத்தக்கூடிய சிறந்த தரவு சேகரிப்புக்கு வழிவகுக்கும்.” என்று கூறப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி : வானிலை அப்டேட்!