ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் கடலில் கடத்தல்காரர்கள் வீசிய தங்க கட்டிகளை ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் இந்திய கடற்படை அதிகாரிகள் தேடி வந்த நிலையில், கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது. அதன் மதிப்பு 7.5 கோடி என தெரியவந்துள்ளது.
ராமநாதபுரதம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் அடுக்கடுக்காக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது தங்க கட்டிகள் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபத்தில் கடத்தல் தங்கத்தை கடலில் வீசி விட்டு தப்ப முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டையில் 12 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது.
இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் கடற்கரை வழியாக தங்கம் கடத்திவரப்படுவதாகத் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேற்று(பிப்ரவரி 8 ) மண்டபம், உச்சிப்புளி, தொண்டி ஆகிய கடற்கரை பகுதியில் இந்திய கடலோர காவல் படைகள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நாட்டுப்படகு வந்தது. ரேடார் மூலம் அந்தப் படகைக் கண்டறிந்த இந்திய கடற்படையினர் அந்த நாட்டுப்படகை விரட்டிச் சென்றனர்.
கடற்படையினர் விரட்டி வருவதை தெரிந்துகொண்டு, நாட்டுப்படகிலிருந்து மூட்டை ஒன்றை அதில் இருந்தவர்கள் கடலில் வீசிவிட்டு தப்பிக்க முயன்றனர். பின்னர், அவர்களை கடற்படை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
அவர்கள் மண்டபம் பகுதியை சேர்ந்த நாகூர் மீரான் என்பதும் அவரது கூட்டாளிகளும் என்பது தெரியவந்தது.
இதனிடையே, மூன்று பேரிடமும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது நாட்டுப்படகில் இருந்து தூக்கி வீசியது என்ன பொருள் என கேள்வி எழுப்பியுள்ளனர் அதிகாரிகள்.
இதற்கு அந்த நபர்கள் உரிய வகையில் பதில் அளிக்காமல் மழுப்பியுள்ளனர்.
பின்னர், மீன்பிடிக்கும் வலையைத்தான் கடலில் வீசினோம் எனக் கூறியுள்ளனர். இதன் காரணமாக சந்தேகம் அடைந்த கடற்படையினர் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் நேற்று முதல் தேடி வந்தனர்.
நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று (பிப்ரவரி 9 ) மீண்டும் தேடும் பணியை கடற்படையினர் மேற்கொண்டனர். அப்போது கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது. அதன் மதிப்பு 7.5 கோடி என தெரியவந்ததுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பார்டர் கவாஸ்கர் டிராபி : ஆல்ரவுண்டர் அஸ்வின் அபார சாதனை!
வாரிசு படத்தின் வெற்றி மகிழ்ச்சியை கொடுத்தது: கணேஷ் வெங்கட் ராம்