தென்காசியில் திருடிய நகையை அணிந்துகொண்டு வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த பெண்ணை, நகை திருடுபோன 3 ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி சிவந்தி நகரைச் சேர்ந்தவர் பங்கஜவல்லி. ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரது வீட்டில் கடந்த 2019ம் ஆண்டு ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் ஈஸ்வரி 6 மாத ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
பின்னர் திடீரென வேலையில் இருந்து ஈஸ்வரி நின்றுள்ளார். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை.
இதையடுத்து சில தினங்களுக்குப் பிறகுதான் பங்கஜவல்லியின் வீட்டில் இருந்த 16 பவுன் தங்கச் சங்கிலி மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவர், தென்காசி போலீசில் புகார் அளித்தநிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் நகை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பங்கஜவல்லி செல்போனில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை பார்த்துக் கொண்டிருந்தபோது ஈஸ்வரியின் புகைப்படமும் இருந்திருக்கிறது.
திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற ஈஸ்வரி, செல்பி எடுத்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அவர் பங்கஜவள்ளியின் வீட்டில் திருடிய நகையை கழுத்தில் அணிந்து இருந்திருக்கிறார்.
அந்தப் புகைப்படத்தை பார்த்த பங்கஜவள்ளி அந்த நகை தன் வீட்டில் காணாமல் போனதுதான் என்பதை உறுதி செய்தார். இது குறித்து தென்காசி போலீசாரிடம் தெரிவித்தார்.
ஈஸ்வரியிடம் நடத்திய விசாரணையில் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை மீட்டு பங்கஜவள்ளியிடம் கொடுத்தனர்.
கலை.ரா
தொடரும் காப்பக மரணங்கள்: தூத்துக்குடியில் சிறுவன் உயிரிழப்பு!
ஆ.ராசா பேச்சு எதிரொலி! வர்ணம், சாதி தேவையில்லை- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்