தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினத்தில் 900 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ள சிறிய வகை ராக்கெட் ஏவுதளத்திற்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சுதீர்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான இரண்டாவது கருத்தரங்கு இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில்,
”தரைவழி, ரயில் வழி, கடல் வழி, ஆகாய வழி, என நான்கு வழி போக்குவரத்து மார்க்கங்கள் கொண்ட சென்னைக்கு அடுத்த மாவட்டம் தூத்துக்குடி தான். இந்த மாவட்டம் தொடர்ந்து தொழில்துறையில் வளர்வதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்குவதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் 400 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக அதிக நீளம் கொண்ட ஓடுதளம் தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைய உள்ளது. இதன் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சுதீர்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சிறிய வகை செயற்கை கோல் ஏவுவதற்காக குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து விட்டன.
இங்கு திட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. 900 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். இன்னும் ஒரு சில வருடங்களில் செயற்கைக்கோள் ஏவப்படும்.
இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் மூலமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெற முடியும்.
போக்குவரத்து, மின்சாரத்துறை, மின்னணு, உணவு உற்பத்தி நிறுவனங்கள் என அனைத்து துறைகளும் ராக்கெட் ஏவுதளம் மூலமாக பயன்பெற முடியும். சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் இந்த நிறுவனத்தின் மூலமாக கிடைக்கும்.
ராக்கெட்டை ஏவுதள கட்டுமான பணியின் போதும், கட்டுமான பணிகள் முடிந்த பின்னும் தொழில் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் பயன்பெறும்.
ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக தொழில் தொடங்கும் வெளியூரைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் மட்டுமன்றி உள் மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு தேவையான உற்பத்தி தளவாடங்களை வழங்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
இந்த தொழில் நிறுவனங்கள் விண்வெளி நிறுவனத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சோதனை பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்,
சரவணன் நெல்லை
யார் சிறுபான்மையினர்? – சீறிய சீமான்
“ஓ.பி.ரவீந்திரநாத் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ஜெயக்குமார்