மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு உதவ அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் முன்வந்துள்ளார்.
கோவை ரைபிள் சங்கத்தின் சாா்பில் 49ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் மற்றும் கைத் துப்பாக்கி சுடும் போட்டிகள், கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் கடந்த மாதம் நடைபெற்றது.
தமிழகம் மற்றும் புதுவையைச் சோ்ந்த 1,655 துப்பாக்கி சுடும் வீரா்கள் இதில் பங்கேற்றனர்.
இதில் கடலூரைச் சேர்ந்த காட்டுமன்னார்கோயில் அரசு கல்லூரி மாணவி கீர்த்தனா கலந்துகொண்டு 3 வெள்ளி ஒரு வெண்கலமும் வென்றார்.
இந்நிலையில், மாணவி கீர்த்தனாவை கல்லூரி முதல்வர் மீனா, அமைச்சர் பன்னீர்செல்வம் வீட்டுக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி அழைத்து சென்றார்.
அங்கு, அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மாணவி கீர்த்தனாவை பாராட்டி அவரது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்.
அப்போது, “காட்டுமன்னார் கோயில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வரும் நான் தேசிய மாணவர் படையில் சேர்ந்து முதலாம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடும் பிரிவில் பங்கேற்று வருகிறேன்.
பல்வேறு நிலைகளை தாண்டி கோவையில் நடைபெற்ற 49வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று 3 வெள்ளி ஒரு வெண்கலம் பதக்கமும் வென்றேன்.
தற்போது தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளேன். வீடு காட்டுமன்னார்கோயில் கோட்டைமேடு ஆர்.சி தெருவில் வசிக்கிறேன். அப்பா ஜோசப் ராஜ், ஓட்டுநராக இருந்து வந்தார். கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
அம்மா கீதா, வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார், எனது அக்கா கிரிஸ்டீனாதான் வேலைக்கு சென்று என்னையும் தம்பியையும் படிக்க வைக்கிறார்” என்று தனது குடும்ப பின்னணி குறித்து கூறினார் கீர்த்தனா.
இதை கேட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மாணவி கீர்த்தனாவின் திறமை வறுமையால் முடங்கி விடக்கூடாது என்று தனது உதவியாளர்களிடம் சொல்லி, கீர்த்தனா வீட்டிற்கு என்ன மாதிரியான உதவிகள் செய்யலாம் என விசாரிக்குமாறு கூறியுள்ளார்.
இந்த மாணவி படிக்கும் கல்லூரியின் தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன் கூறுகையில், “இந்த மாணவி ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் மாணவி.
இவருக்கு நிறைய திறமை இருக்கிறது. இக்கல்லூரியில் ஆகஸ்ட் 10 2023ல் என்சிசி கேம்ப் நடத்த ஆரம்பித்தோம். ஒரு ஆண்டுக்கு 8 கேம்ப் நடைபெறும், ஒவ்வொரு கேம்ப்பும் 12 நாட்கள் நடைபெறும். அதில் அனைத்திலும் தவறாமல் கலந்துகொள்வார்.
முதலில் போட்டியில் கலந்துகொள்ள ஷூ போன்ற தேவையான உடைமைகள் கூட அவரிடம் இருக்காது. இருந்தாலும் ஆர்வமுடன் கலந்துகொண்டு விளையாடுவார்.
அவரது திறமையை பார்த்து எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம். கோவையில் நடந்து முடிந்த போட்டியில் வெள்ளி, வெண்கலம் பதக்கம் பெற்றிருக்கிறார்.
மேலும் அவருக்கு உதவிகள் கிடைத்தால் தேசிய அளவில் நிச்சயம் நம் மாநிலத்துக்கு பெருமையை சேர்ப்பார்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
லவ் டார்ச்சர்… விஷம் குடித்த இளம்பெண்… இறப்பதற்கு முன்பு சகோதரர்களுக்கு ராக்கிய கட்டிய சோகம்!