தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 21) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்திற்கு கூடுதலாக ஆறு மருத்துவக் கல்லூரிகள் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நானும், மருத்துவ துறை செயலாளர் செந்தில் குமாரும் அடுத்த வாரம் டெல்லியில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்து, தமிழகத்திற்குத் தேவையான மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை தொடங்குவது, கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைப்பது, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்.
கொரோனா தடுப்பூசிகள் முடிந்துவிட்ட காரணத்தினால், கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும். என்ற கோரிக்கையையும் வலியுறுத்தவுள்ளோம்.” என்றார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 38 ஆனது.
இந்தநிலையில், கூடுதல் மருத்துவக் கல்லூரிகள் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கினால் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 44 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்: சுற்றிச் சுற்றி ஆய்வு செய்யும் அமைச்சர் மாசு