சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் காயமடைந்த விற்பனையாளர் அர்ஜூன் இன்று (மார்ச் 15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரைக்குடியை அடுத்த பள்ளத்தூர் அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக இளையான்குடியைச் சேர்ந்த அர்ஜூன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் 3-ஆம் தேதி இரவு 10 மணியளவில் டாஸ்மாக் கடை கதவை பாதி அளவு அடைத்து விட்டு மதுவிற்பனை கணக்குகளை சரிபார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது கடை முன்பாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மதுவால் தனது குடும்பம் சீரழிந்து விட்டதாக கூறி டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.
இதில் கடையில் இருந்த மதுபாட்டில்கள் சேதமடைந்துள்ளது. பணியில் இருந்த அர்ஜுனனுக்கு உடலில் 60 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டது. அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரசு மதுபான கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக பள்ளத்தூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுபான கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தீக்காயம் அடைந்த நபர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
ஆஸ்கர் வென்ற ‘ஆர்.ஆர்.ஆர்’ முதல் ‘அவதார்’ வரை…எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!