“தனியார் பள்ளிகள் விடுமுறை நாள்களில் வகுப்புகள் நடத்தி அழுத்தத்தைத் தரக்கூடாது” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பயணம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஜூலை 30) அரசுப் பள்ளிகளைப் பார்வையிட்டார். அதன்பிறகு சேலம் அஸ்தம்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளது. சுமார் 2500 பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பறையின்றி மரத்தடியில் கல்வி பயிலும் நிலை உள்ளது. அதற்கு கணக்கீடு செய்யப்பட்டு கூடுதல் வகுப்பறைகள் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி பள்ளி சம்பந்தமான கேள்விக்கு, “அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பள்ளி திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு படிப்பில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதால் ஆன்லைன் வகுப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. அப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய கவனம் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மீது உள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளியில் படித்துவரும் மாணவர்களிடம், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் 907 பேர் எங்கு படிக்கலாம் என தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி அதையும் நம் அரசு செய்யும்” என்ற மகேஷ் தனியார் பள்ளிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.
“ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் கம்பேர் பண்ணி பார்க்காதீர்கள். மன அழுத்தம் தராதீர்கள். கொரோனாவுக்குப் பிறகு தற்போதுதான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக்கு வர ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு எந்த அழுத்தத்தையும் தர வேண்டாம். அவர்களைச் சுதந்திரமாக விளையாட விடுங்கள் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை!
ஆகையால், தனியார் பள்ளிகள் வாரவிடுமுறை நாள்களில் பள்ளிகளை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். குழந்தைகளுக்கான 2 நாள்களை அவர்கள் அனுபவிக்கவிட வேண்டும். தனியார் பள்ளிகள் அவர்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்தக் கூடாது. தனியார் பள்ளிகள் விடுமுறை நாள்களில் வகுப்புகள் நடத்தி அழுத்தத்தைத் தரக்கூடாது.
மாணவர்களுக்கு என்று ஓர் உலகம் இருக்கிறது. அதனால் மாணவர்கள் ஒருபோதும் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். நீங்கள் பெறும் மதிப்பெண்தான் உங்களை மதிப்பீடு செய்யும் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொரு குழந்தையையும் வளர்த்தெடுப்பதற்கு இந்த சமூகத்தில் உள்ள ஆசிரிய பெருமக்களும் பெற்றோர்களும் உதவ வேண்டும். தமிழகம் முழுவதும் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உடல்நலம் மற்றும் மன நலம் சார்ந்த பிரச்சினைகளை ஒவ்வொரு வட்டாரங்களிலும் 2 மருத்துவர்கள் கவனிக்க உள்ளனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவர்கள் பள்ளிக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்