ஆம்பூரில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற சகோதரிகள் லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.
முதல் மகள் ஜெயஸ்ரீ (14). இளைய மகள் வர்ஷா (12). ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஜெயஸ்ரீ 11 ஆம் வகுப்பும், வர்ஷா 6 ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.
இருவரும் தினசரி பள்ளி வாகனத்திலேயே சென்று வருவது வழக்கம்.
ஆனால் இன்று (செப்டம்பர் 15) காலை பள்ளி வாகனத்தை தவறவிட்டதால் தண்டபாணி தனது இரு பெண் பிள்ளைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
ஆம்பூர் ஓ.ஏ.ஆர்.திரையரங்கம் அருகில் உள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்த போது கர்நாடகாவிலிருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று தாறுமாறாக ஓடி சாலைத்தடுப்பை உடைத்துக் கொண்டு தண்டபாணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் ஜெய ஸ்ரீ மற்றும் வர்ஷா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர் படுகாயமடைந்த தண்டபாணியை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
கலை.ரா
2021ல் அதிக விபத்து : இரண்டாம் இடத்தில் தமிழகம்!