டிரோன் மூலம் கண்காணிக்கப்படும் ஒற்றை யானை!

உடல் நலக்குறைவால் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானையை தமிழக – கேரள வனத்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

தமிழ்நாடு கேரளா எல்லையான ஆணைக்கட்டி அட்டப்பாடி வன பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் யானைகள் தமிழ்நாடு – கேரளா எல்லை பகுதிகளுக்குள்ளாக மாறி மாறி வலசை சென்று உணவு உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று(ஆகஸ்ட் 16) காலை சீங்குளி என்ற பழங்குடி கிராமத்துக்கு வந்த ஒற்றை காட்டு யானை உடல் நலம் மெலிந்து நின்று கொண்டிருந்த நிலையில் பழங்குடி கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தந்தனர்.

இருமாநிலத்துக்கும் பொதுவான இடத்தில் யானை இருந்ததால் அதற்கு சிகிச்சை அளிப்பது யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். எல்லைப் பிரச்சினையை காரணம் காட்டி யானைக்கு சிகிச்சை அளிக்காமல் தாமதிப்பதா என்று கேள்வி எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து இருமாநில வனத்துறையினரும் யானைக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தனர்.

Single elephant monitored by drone

முதற்கட்டமாக யானைக்கு தேவையான பழங்களை இட்டு உணவு உட்கொள்ள முயற்சி செய்தனர். இந்த நிலையில் யானை காட்டிற்குள் சென்றது.

இதையடுத்து ட்ரோன் பறக்கவிட்டு யானையை வனத்துறை தேடினர். தமிழ்நாடு கேரளா எல்லை என்பதனால் தமிழ்நாட்டு வனத்துறையிலிருந்து 5 குழுக்களும், கேரளாவிலிருந்து 4 குழுக்களும் ஒன்றிணைந்து காட்டுக்குள் சென்ற யானையை தேடினர். இரவு வரை யானை யாருக்கும் தென்படவில்லை.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று கூடுதல் ஏற்பாடுகளுடன் தமிழக வனத்துறை அதிகாரிகள் ஒற்றை யானையை ட்ரோன் கேமராக்களுடன் தேடும் பணியில் ஈடுபட்டுனர்.

7 குழுக்களாக விரிவு செய்யப்பட்டு யானை நோட்டம் இடப்பட்ட பகுதியிலிருந்து 7 கிலோ மீட்டர் சுற்றளவில் யானையைத் தொடர்ந்து தேடி வந்தனர்.

யானை பிடிபட்டால் சிகிச்சை தர வனத்துறையின் கால்நடைமருத்துவர்கள் மூன்று பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

Single elephant monitored by drone

உடல் நலம் குன்றிய ஒற்றை காட்டு யானை ஆக்ரோசமாக இருப்பதனால் யானையிடம் நெருங்கி சிகிச்சை அளிக்க கும்கி யானை கலீம் வரவழைக்கப்பட்டது.

காட்டுக்குள் உடல் நலம் குன்றிய யானை மட்டுமின்றி இரண்டு யானைகள் கூடுதலாக உலா வந்ததை முதல் நாள் தேடுதலில் வனத்துறையினர் பார்த்ததால்,  தேடுதல் வேட்டைக்கு சென்றவர்கள் உடல் நலம் குன்றிய யானையின் புகைப்படத்தை எடுத்துச் சென்றனர்.

யானைக்கு உடல் சத்து மாத்திரை, வலி நிவாரணி, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை தயாராக வைக்கப்பட்டிருந்தது. கலீம் மட்டுமின்றி கூடுதலாக முத்து என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டது.  

ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு , கேரளா வனத்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து காட்டு யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் ஆனைகட்டி பட்டிசாலை சரகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை இருக்கும் என வனத்துறை கணித்தது.

இதையடுத்து பட்டி சாலை – காரமடை வன சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதில் செங்குட்டை பகுதியில் ஒற்றை யானை இருப்பதை வனத்துறை கண்டறிந்தது.

தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை டிரோன் மூலம் இருமாநில வனத்துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.

கலை.ரா

யானைகள் காப்பகமாக மாறிய அகஸ்தியர் மலை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts