உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்ளை மீட்கும் பணியில் திருச்செங்கோட்டில் தயாரிக்கப்பட்ட பிஆர்டி ஜிடி 5 ரிக் இயந்திரம் முக்கிய பங்காற்றியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் சுரங்க வல்லுநர்கள் ஈடுபட்டு வந்தனர். 17 நாட்கள் தொடர் முயற்சியின் விளைவாக நேற்று இரவு அனைத்து தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர்.
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நவீன இயந்திரங்கள் வர வழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு தேவையான உணவுகளை எடுத்து செல்ல நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிஆர்டி ரிக் நிறுவனம் தயாரித்த பிஆர்டி ஜிடி 5 என்ற நவீன இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு தரணி ஜியோ டெக் நிறுவனம் இமயமலை பகுதிகளில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி வருகிறது. இதன் விலை ரூ.85 லட்சமாகும்.
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தரணி ஜியோ டெக் நிறுவனத்தினரின் உதவியை மீட்பு படையினர் நாடியுள்ளனர்.
உடனடியாக உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதைக்கு தரணி ஜியோ டெக் நிறுவன ஊழியர்கள் விரைந்தனர். அங்கு 360 டிகிரியில் சுழலக்கூடிய ஜிடி 5 இயந்திரத்தின் உதவியால் சுரங்கப்பாதையில் 6 அங்குலம் விட்டத்தில் 110 மீட்டர் தொலைவிற்கு துளையிட்டு பைப்கள் மூலமாக சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் எண்டோஸ்கோபிக் கேமராவை அனுப்பி வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்களை அவர்களின் குடும்பத்துடன் பேச வைத்தனர்.
சிமெண்ட்ரி சிஸ்டம் என்ற முறையை பயன்படுத்தி சுரங்கப்பாதையில் துளையிட்டுள்ளனர். இந்த வகையில் துளையிடும்போது உடன் செல்லும் கேஸ்டிங் பைப் ட்ரில்லரை வெளியில் எடுக்கும் போது துளைக்குள்ளேயே நின்றுவிடும்.
இதுகுறித்து தரணி ஜியோ டெக் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜெயவேல் கூறும்போது, “சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க எங்களுக்கு அழைப்பு வந்தது.
சுரங்கப்பாதையில் 6 அங்குலம் விட்டமுள்ள துளை அமைத்து மீட்பு பணியை மேற்கொண்டோம். இரண்டு முறை இரும்பு கம்பிகள் குறுக்கிட்டதால் துளையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. மூன்றாவது முறை வெற்றிகரமாக துளையிட்டோம்” என்று தெரிவித்தார்.
பிஆர்டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் கூறும்போது, “1972-ஆம் ஆண்டு பரந்தாமன் ராக் டிரில்லர் என்ற பெயரில் நிறுவனம் துவக்கினோம்.
சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க எங்கள் நிறுவனம் தயாரித்த பிஆர்டி ஜிடி5 இயந்திரத்தை அனுப்பினோம். 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமீர் குறித்த விமர்சனம்: வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா
சென்னையில் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை!