பட்டுப் புடவை கட்டினால் அசைவமே… உணவையும் தாண்டிய நனி சைவம்!

தமிழகம்

உணவு என்பது மானுடக் கூட்டத்தின் வாழ்வியலில் முக்கியக் கூறு.  நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீ தீர்மானிக்க முடியாது என்ற போராட்டங்கள் இன்று உணவு அரசியலையும் உரக்கப் பேசுகின்றன.

நனிசைவம் என்றால் என்ன?

இந்த நிலையில்தான்  சைவம், அசைவம் என்பதைத் தாண்டி இப்போது நனி சைவம் என்ற ஒரு கேட்டகிரியும் தீவிரமாக பேசப்படுகிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போனால்  உணவைத் தாண்டி நாம் பயன்படுத்தும் மற்ற பொருட்களிலும் சைவம், அசைவம்  என்ற பேதம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதுதான் நனி சைவம்.

உதாரணத்துக்கு தோல் செருப்பு அணிவது, ஷு அணிவது, தோல் பை பயன்படுத்துவது போன்றவற்றை அசைவம் என்கிறார்கள். இப்படிப்பட்ட உணவையும் தாண்டி உபயோகிக்கும் பொருட்களின் அடிப்படையில் சைவத்தை நனி சைவம் என்கிற தீவிர சைவமாக்கியிருக்கிறார்கள்.

இந்த நனி சைவ கொள்கைக்கு கொடி பிடிப்பதில் தற்போது முன்னணி பங்கு வகிக்கிறார் கவிஞரும் திரைப் பாடலாசிரியருமான தாமரை.

உள்ளத்தை அள்ளும் புதுப் புது இயல்புச் சொற்களால் நம்மை வசீகரித்த தாமரை நனி சைவம் குறித்த தன் கருத்துகளை தனது சமூக தளப் பக்கங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.  அதில் ஒன்றுதான் பட்டுச் சேலை கட்டுவதும் அசைவம் என்பதும்.

பட்டுச் சேலை கட்டினால் அசைவம்

உணவுப் பழக்க வழக்க ரீதியாக  முழு தாவர  உண்ணியாக இருக்கும்  பெண்கள் பெரும்பாலானோர் பட்டுச் சேலை கட்டுவோர்தான். ஆனால் தாமரையின் பார்வையில் பட்டுச் சேலை கட்டினால் அவர்களை அசைவர்கள் என்கிறார்.

சென்னையில், ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலை சி.பி.ஆர் மையத்தில் நடந்து முடிந்த  நனிசைவத் (Vegan) திருவிழா பற்றிய  தனது பார்வையைத்தான் இப்படி பதிவு செய்கிறார் கவிஞர் தாமரை.

வள்ளுவரும் வள்ளலாரும்

 “நனிசைவம் என்பது வெறும் உணவு மட்டுமல்ல… விலங்குகளைத் துன்புறுத்திப் பெறப்படும் எந்தப் பொருளையும் மறுப்பதுதான். தோல், உரோமம், பட்டு, தந்தம், முத்து, கொம்பு, பல், நகம் உள்ளிட்ட அனைத்து விலங்கு வகைப் பொருட்களையும் மறுப்பது.  இவையெல்லாம் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை. ஆனால் விலங்குகளுக்கு அவை உயிர்வாதை ! வலி, வேதனை, அன்பு, பாசம் ஆகியவற்றை உணர முடிகிற விலங்குகளுக்கு ( பறவைகள், பிற உயிரினங்களும் அடக்கம்), ஆறறிவு படைத்த மனித இனம் இரக்கம் காட்டுவதுதான் முறை . வள்ளலார் அப்படித்தான் வாழ்ந்தார். வள்ளுவரும் இதையே  வலியுறுத்துகிறார்” என்று குறிப்பிடும் தாமரை, தொடர்கிறார்.

பட்டுப் புழுக்கள் கொதி நீரில் வேக வேண்டுமா?

 “நனிசைவர்கள் இரக்கத்தால் உந்தப்பட்டவர்கள். விலங்குப் பொருட்களை அவர்கள் மறுப்பதை ஏதோ வணிகப் பலனுக்காகச் செய்வதாகக் கொச்சைப் படுத்துவது தவறு. அறியா வயதில் நான் அணிந்த பட்டு உடைகளைத் தவிர இன்று வரை பட்டு அணிந்ததில்லை. பல இலட்சங்கள் மிச்சம் . பட்டு போல் தோற்றமளிக்கும் துணி வகைகள் வந்து விட்டன. நம் பேராசைக்காக மெல்லிய பட்டுப்புழுக்கள் கொதிக்கும் நீரில் உயிரோடு வேக வேண்டுமா?  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

நனிசைவச் சந்தை

தோல், பட்டு, தேன், இறைச்சி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுக்கும் மாற்று கண்டு பிடிக்க நனிசைவர்கள் தலைப்பட்டார்கள். அச்சு அசல் மூலத்தைப் போலவே கிடைக்கும் தாவரப் பொருட்கள் இருக்க, உயிரினங்களைத் துன்புறுத்திப் பெறப்படும் விலங்குப் பொருட்கள் எதற்கு?.
இதுபோன்ற ‘போலப் பொருட்கள்’ இல்லாமலே நனிசைவர்களால் வாழ முடியும். எனினும் தாவரங்களிலிருந்தே இவற்றை ஆக்கிக் கொள்ள முடியும் என்று காட்டுவதற்காகப் பலர் சோதனை முயற்சியாக ஆரம்பித்து வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வருகிறார்கள்.
மாற வேண்டும் என்று விரும்பும் அசைவர்களுக்கான கண்காட்சி இது. உணவுகள், உடைகள், காலணிகள், பணப்பை, இடுப்புப் பட்டை, கழுத்துப்பட்டி உள்ளிட்ட அனைத்தையும் காட்சிப் படுத்தியிருக்கின்றனர்” என்று அந்த நனி சைவ கண்காட்சி பற்றி அறிமுகப்படுத்துகிறார் தாமரை.

பட்டுப் புடவை…. 1981 இல் மோட்சம்… 2022 இல் கொலை!

1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை படத்தில் விழியில் விழுந்து இதயம் நுழைந்து பாடலில்….

நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

என்று எழுதியிருந்தார் வைரமுத்து.

நாற்பது வருடங்களில் இதோ 2022 இல் பட்டுப் பூச்சிகளைக் கொன்று பட்டுப் புடவை தேவையா? என்ற நனி சைவக் கேள்வியை அதே திரைத் துறையை சார்ந்து எழுப்பியிருக்கிறார் கவிஞர் தாமரை.  

உணவையும் தாண்டிய இந்த நனி சைவம்  மனித நாகரிகத்தின் அடுத்த கட்டமாகவே காட்சிப்படுகிறது.

ஆரா

+1
0
+1
1
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *