எடையைக் குறைக்க நினைப்பவர்களும் சரி, என்றும் இளமையாக இருக்க நினைப்பவர்களும் சரி… `நானெல்லாம் சாதத்தைப் பார்த்தே பல வருஷமாச்சு… இட்லி, தோசைக்கெல்லாம் தடை போட்டாச்சு…’ என்று சொல்வார்கள். சற்று பருமனாக இருப்பவர்கள், இவர்களின் பேச்சை அப்படியே நம்பி, அதுதான் சரிபோல எனக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவார்கள்.
ஆரோக்கிய விரும்பிகளைப் பொறுத்தவரை அரிசி உணவு என்பதே வேண்டாத பொருள் என்று சித்திரிக்கப்பட்டிருப்பது சரிதானா… எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அரிசி உணவைத் தவிர்ப்பது நல்லதா?
“எடைக்குறைப்பு முயற்சியைத் தொடங்க இருப்போர், எடைக் குறைப்பு முயற்சியில் பலன் கிடைக்காதவர்கள் எனப் பலருக்கும் இந்தச் சந்தேகம் இருக்கிறது. இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன், ஊட்டச்சத்து குறித்த சில உண்மைகளைத் தெரிந்துகொள்வது நல்லது.
உடல் இயக்கத்துக்கான எரிபொருளைத் தயாரிக்க நம் உடலுக்கு மூன்று விதமான உணவுகள் தேவை. அவை கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு. வளர்ச்சிக்கும் உடலின் பழுது பார்க்கும் செயலுக்கும் நம் எல்லோருக்குமே இந்த மூன்று வகையான உணவுகளும் அவசியம்.
இந்த மூன்றில் அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட்தான் உடலுக்கு ஆற்றல் கொடுக்கக்கூடிய முதல் உணவாகக் கருதப்படுகிறது.
அப்படிப்பட்ட கார்போஹைட்ரேட்டை அறவே தவிர்ப்பது என்பது சரியா என்பதை யோசிக்க வேண்டும். கார்போஹைட்ரேட் என்பது பரவலாக எல்லா உணவுகளிலும் கிடைக்கக்கூடியது.
தானிய வகைகள், சிறுதானியங்கள், பெரிய அளவிலான பருப்புகள், கிழங்கு வகைகளில் இந்த கார்போஹைட்ரேட் சத்தானது அதிகம் உள்ளது.
அந்த வகையில் அரிசி உணவான கார்போஹைட்ரேட்டை அறவே தவிர்ப்பது என முடிவு செய்கிற ஒருவர், அவரது உணவுப் பட்டியலில் பெரும்பாலான உணவுகளைத் தவிர்க்கிறார் என்று அர்த்தம்.
சிலவகை மருத்துவக் காரணங்களுக்காக மருத்துவர்கள் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகர்களே கார்போஹைட்ரேட்டைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துவதும் உண்டு. ஆக, அந்த முடிவானது தனிநபரின் ஆரோக்கியத்தின் அடிப்படையில், தேவைக்காக எடுக்கப்படும் முடிவாகும்.
வேறெந்தக் காரணங்களுக்காகவெல்லாம் கார்போஹைட்ரேட்டைத் தவிர்க்கலாம்?
எடைக்குறைப்பு முயற்சியில் பல வருடங்களாகப் போராடுகிறீர்கள்…. என்னென்னவோ டயட் முறையைப் பின்பற்றியும் பலன் இல்லை என்ற நிலையில், கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு சர்க்கரை, சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைக் குறைக்கலாம்.
குடல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவராக இருந்தால், கோதுமை உணவுகளை அறவே தவிர்த்துவிட்டு, ஒரு மாதம் கழித்து மறுபடியும் அவற்றைச் சேர்த்துக்கொண்டு, குடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.
பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ளவர்கள், பழங்கள், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுவார்கள். அவற்றிலுள்ள சர்க்கரைச் சத்தானது பி.சி.ஓ.எஸ் பாதிப்பின் தீவிரத்தை அதிகரிக்கலாம் என்பதே காரணம்.
மனப்பதற்றம் அதிகமுள்ள குழந்தைக்கு அதிக இனிப்பு சேர்த்த உணவுகள், பாக்கெட் உணவுகள், நேரடி இனிப்பு போன்றவற்றைத் தவிர்க்க அறிவுறுத்துவார்கள். இத்தகைய உணவுகள் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்து, ஹார்மோன் அளவுகளில் ஏற்ற, இறக்கங்களை உருவாக்கி, நடவடிக்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
வலிப்பு நோய் உள்ளவர்கள், நரம்பியல் பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவரை ஆலோசித்து குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டியிருக்கும்.
கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து உண்பது அல்லது அறவே தவிர்ப்பது என முடிவு செய்வோர் கீழ்க்காணும் விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் எவை என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
* கார்போஹைட்ரேட்டுக்கு மாற்று என்ன எனத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
* கார்போஹைட்ரேட்டை அறவே தவிர்ப்பது என முடிவு செய்தால் அது மலச்சிக்கல் பிரச்னையை ஏற்படுத்தலாம்… எனவே அதுகுறித்தும் அலெர்ட் ஆக வேண்டும்.
* அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட்டைத் தவிர்ப்பதால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படலாம். எனவே அதற்கான சப்ளிமென்ட் எடுப்பது குறித்து மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்” என்று விளக்கமாக விடையளித்தார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.