தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை பெற்றோர் கடத்தியதாக கூறப்படும் வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் இலஞ்சி கொட்டாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வினித் – கிருத்திகா பட்டேல் ஜோடி.
பள்ளி பருவத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
எனினும் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்த பெண் வீட்டார், வினித்திடம் இருந்து பிரித்து கிருத்திகாவை வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருத்திகா கடத்தல் தொடர்பாக வினித் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த குற்றாலம் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக, தனக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே குஜராத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து மைத்திரிக் பட்டேல் என்ற நபருடன் திருமணம் நடைபெற்றது என்றும், அதன் பின்னர் ஆசை வார்த்தை கூறி வினித் தன்னை திருமணம் செய்து கொண்டார் என்றும், தன் விருப்பப்படியே பெற்றோர் உடன் சென்றிருப்பதாகவும் பேசி கிருத்திகா வீடியோ ஒன்றினை வெளியிட்டார்.
பெற்றோரின் மிரட்டலின் பேரில் தான் கிருத்திகா இவ்வாறு பேசுவதாக கூறிய வினித், தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சம்பந்தப்பட்ட பெண்ணை காவல் துறையினர் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி தென்காசி காவல்துறையினர் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு கிருத்திகாவை இன்று ஆஜர்படுத்தினர்.
அப்போது கடத்தப்பட்டதில் உள்ள உண்மையை கண்டறிய கிருத்திகா போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ந்து கிருத்திகாவிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும்.
கிருத்திகாவை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெற வேண்டும். கிருத்திகாவின் பாதுகாப்பு மிக முக்கியம்.
பெற்றோர் கிருத்திகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும். பெற்றோர் கட்டாயப்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 13 ஆம் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
புலிக்கு பிறந்தது பூனையாகாது : சாதனை பட்டியலில் சந்தர்பால் & கோ
ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர்கள்!