வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான டி.புதுப்பட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது.
லட்சுமணனின் உடல் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது. விமான நிலையத்தில் அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர்.
அதேபோன்று பாஜக தலைவர் அண்ணாமலையும் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வர இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அக்கட்சித் தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.
அப்போது அங்கிருந்தவர்கள் அமைச்சர் மரியாதை செலுத்திவிட்டு சென்றபிறகே மற்றவர்கள் அஞ்சலி செலுத்தவேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்ற காரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அதில் ஒருவர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்களை அப்புறப்படுத்தினர். அமைச்சரின் கார் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக அவனியாபுரம் மற்றும் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கலை.ரா
ஆர்டர்லிகளை திரும்ப அனுப்ப உத்தரவு!