கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான விசாரணையில், இன்னும் விற்கப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 பேரல் மெத்தனாலை போலீஸார் கைப்பற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் மேலும் ஒரு பெரும் கள்ளச்சாராய கொடூரம் தடுக்கப்பட்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த ஜூன் 19, 20 தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 219 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 65 பேர் உயிழந்தனர்.
இந்த வழக்கில் கள்ளச்சாராய வியாபாரி கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா, தம்பி தாமோதரன் ஆகியோர் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதில் கோவிந்தராஜிடம் போலீசார் நடத்திய விசாரணை குறித்து மின்னம்பலத்தில் ஜூன் 20ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.
“கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்டது மரக்காணம் சரக்கா ? கன்னுக்குட்டியிடம் போலீஸ் விசாரணை விவரம்” என்ற தலைப்பில் வெளியான செய்தியில்,
“கன்னுக்குட்டி விற்பனை செய்த மீத சரக்கை பறிமுதல் செய்து தடய அறிவியல் இயக்குநர் சண்முகம் ஆய்வு செய்ததில் மெத்தனால் கலந்து இருந்தது உறுதி செய்யப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையிலும் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர்.
8.6 சதவிகிதம் முதல் 29.7 சதவிகிதம் வரை மெத்தனால் கலந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சிபிசிஐடி போலீசார் கன்னுக்குட்டி அவரது மனைவி விஜயா, தம்பி தாமோதரன், சப்ளையர் சின்னத்துரை, ஜோசப் ராஜ், மெத்தனால் சப்ளையர் பன்வில்லால், கவுதம் சந்த் ஆகிய 11 பேரை மூன்று நாள் கஸ்டடியில் விசாரித்தனர்.
கன்னுக்குட்டி அவரது மனைவி, தம்பி ஆகிய மூவர் ஏ.டி.எஸ்.பி. திருமலையிடம், “நாங்க பல ஆண்டுகாலமாக சாராயம் விற்பனை செய்து வருகிறோம். இதுவரையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. வழக்கமாக சின்னத்துரை மற்றும் ஜோசப் ராஜ் ஆகிய இருவர்தான் சப்ளை செய்வார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
உடனே சின்னத்துரை மற்றும் ஜோசப் ராஜ் இருவரை கைது செய்த போலீஸார் அவர்கள் வாக்குமூலத்தை வைத்து மடுக்கரை மாதேஷ், ஷாகுல் அமீது ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன் அழைப்புகளை எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து மாதவரம் விஷ்ணு கெமிக்கல்ஸ் ஓட்டுனர் சிவக்குமார், பன்வில் லால், கவுதம் சந்த், ராசாப்பாளையம் ஜோதி சிப்ஸ் உரிமையாளர் சக்திவேல் ஆகியோரை கைது செய்து போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்துவிட்டு மீண்டும் சிறைக்கு அனுப்பியுள்ளனர்.
மெத்தனால் கலந்த சாராயத்தை விற்பனை செய்தவர் முதல் மெத்தனால் சப்ளை செய்த சேட்டு வரையில் அனைவரையும் தனித்தனியாக வைத்து விசாரணை செய்தனர்.
கள்ளச்சாராயத்தை கன்னுக்குட்டிக்கு விற்பனை செய்த ஜோசப் ராஜிடம் போலீசார் ஸ்பெஷலாக விசாரித்திருக்கின்றனர்.
இதில் ஜோசப் ராஜ், ” நான் அடிக்கடி சாராய வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறையில் இருப்பேன். சிறைக்குள் புதுச்சேரியைச் சேர்ந்த மடுக்கரை ஷாகுல் அமீதின் அறிமுகம் கிடைத்தது .
அப்போது மலையில் காய்ச்சும் சாராயம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதனால் என்னால் தேவைக்கு சப்ளை செய்ய முடியவில்லை என அவரிடம் சொன்னேன். அதற்கு ஷாகுல் அமீது, ‘புதுச்சேரியில நிறைய வியாபாரிங்க இருக்காங்க. நான் வெளியில வந்ததும் என்னை பாரு… குறைந்த விலையில் சப்ளை செய்ய சொல்றேன்’ என்றார்.
அதேபோல் வெளியில் வந்ததும் ஷாகுலை சந்தித்தேன். அவர் மாதேஷை அறிமுகம் செய்து வைத்து சப்ளை செய்ய சொன்னார்” என்று கூறியிருக்கிறார்.
19 வயது இளைஞர் மாதேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “என் அப்பா பெயர் மாதவன், அம்மா பெயர் பிரபாவதி. எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். எனக்கு ஆறு வயது இருக்கும் போது அப்பா அம்மா பிரிந்துவிட்டார்கள். மடுக்கரையில் பாட்டி வீட்டில் இருந்து வருகிறேன்.
அம்மா சின்ன கடை ஒன்று வைத்திருக்கிறார். கஷ்டம் அதிகமாக இருந்தது. அப்போதுதான் ஷாகுல் கள்ளச்சாராயம் வியாபாரம் சொல்லிக்கொடுத்து வருமானத்துக்கு வழி சொன்னார்.
அதன் பிறகுதான் மாதவரம் விஷ்ணு கெமிக்கல் நிறுவனத்தில் மெத்தனால் வாங்கினோம். ஜிஎஸ்டி பில் வைத்து அந்த கம்பெனி ஓட்டுநர் சிவக்குமார் மூலமாக அவ்வப்போது பிளாக்கில் வாங்கி வந்தோம்,
கவுதம் சேட்டுவிடம் 8 பேரல் வாங்கினோம். அதில் இரண்டு பேரலில் தண்ணீர் கலந்து விற்றபோது அது தரமாக இல்லை என்பது தெரியவந்தது. இதனால் மீதமிருந்த 6 பேரலை ரிட்டன் கொடுத்து விட்டோம். அதன் பிறகு பன் வில்லால் சேட்டுவிடம் 11 பேரல் வாங்கினோம் (ஒரு பேரலுக்கு 35 லிட்டர் வரும். ஒரு லிட்டர் 30 ரூபாய்) 11 பேரலில் 3 பேரல் மெத்தனாலில் தண்ணீர் கலந்து சாராயமாக கொடுத்துவிட்டோம். அதனால் ஏற்பட்ட சம்பவம்தான் கள்ளக்குறிச்சியில் நடந்தது. இன்னும் 8 பேரல் விற்காமல் வைத்து இருக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார் 19 வயது இளைஞரான மாதேஷ்.
உடனே விசாரணை அதிகாரிகள் மீதமிருந்த 8 பேரல் எங்கே என்று விசாரித்து, அந்த 8 பேரல் மெத்தனாலை கைப்பற்றியிருக்கிறார்கள். ஒருவேளை மாதேஷிடம் இருந்து இந்தத் தகவல் கிடைத்திருக்காவிட்டால்… இன்னும் சில மாதங்கள் வரை வைத்திருந்து விற்று, மேலும் பற்பல உயிர்களைக் குடித்திருப்பார்கள்.
3 பேரல் சாராயத்துக்கே 68 பேர் வரை இறந்து 200 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மீதம் 8 பேரல் மெத்தனால் சாராயமாக கன்வர்ட் செய்யப்பட்டு விற்கப்பட்டால் 600 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று பெருமூச்சு விடுகிறார்கள் விசாரணை அதிகாரிகள் வட்டாரத்தில்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக நிர்வாகி கொலை.. உறவினர்கள் போராட்டம் : எடப்பாடி கண்டனம்!
சட்டென வளர்ந்தார்; பட்டென வீழ்ந்தார்… கோவை மேயரின் ராஜினாமா பின்னணி!
ஆறு நாட்களில் ரூ.700 கோடி வசூலை கடந்த ‘கல்கி 2898 AD’
ஓ.சி-யில் வேர்க்கடலை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளர்!
ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க ஸ்கிப்பிங் எந்த அளவுக்கு உதவும்?