கலாஷேத்ராவில் நடன ஆசிரியராக பணிபுரிந்த ஹரிபத்மன் தற்போது, அந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவிகளால் பாலியல் புகார் கூறப்பட்டு கைதாகி புழல் சிறையில் இருக்கிறார்.
போலீஸ் விசாரணை, மகளிர் ஆணைய விசாரணை என்று இதன் கிளைகள் விரிந்துகொண்டே இருக்கும் நிலையில்… ஹரிபத்மனை போலீஸ் கைது செய்தது எப்படி, அவரிடம் விசாரணை நடத்தியபோது நடந்தது பற்றியெல்லாம் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

பாலியல் ரீதியான புகார்கள் வெளிப்படையாக கூறப்படுவது தான் இந்த கலாஷேத்ராவுக்கு புதிதே தவிர, கடந்த வருடங்களில் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் அவ்வப்போது சலசலப்பு ஏற்படுத்தியதுண்டு.
கலாஷேத்ரா கல்லூரி இயக்குநராக இருக்கும் ரேவதி ராமச்சந்திரன் மற்ற பேராசிரியர்களைவிட ஹரிபத்மனுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இந்த செயல் மற்ற பேராசிரியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. வெளியூர் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஹரிபத்மனுக்கே அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும்… ஹரிபத்மன் மீது சக பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் சிறு சிறு புகார் கொடுத்தாலும் இயக்குநர் ரேவதி அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டது, மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு கோபத்தை அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில்தான்… ஹரிபத்மன் மீது பாலியல் புகார்கள் எறியப்பட்டுள்ளன.
ஹரிபத்மன் மீது கேரள மாநிலத்தைச் சேர்ந்த கலாஷேத்ராவில் படித்த அந்த முன்னாள் மாணவி அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரை அடுத்து ஹரிபத்மன் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை… புகார்கொடுத்த மாணவியை விசாரிக்க கேரளா சென்றனர்.
உதவி ஆணையர் சிபி சக்கரவர்த்தியின் ஆலோசனைப்படி கேரளா சென்ற போலீஸ் டீம் சேகரித்த ஆதாரங்கள்தான் ஹரிபத்மனுக்கு எதிராக வலுவாக நிற்கின்றன.
கேரளாவுக்கு சென்ற போலீஸ் டீம் புகார் கொடுத்த மாணவியையும், அவரது தாயாரையும் விசாரித்தது.
அந்த மாணவி போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில்…
‘ஹரிபத்மன் சார் கலாஷேத்ராவுல சீனியர். பொதுவா இதுபோன்ற கலை வகுப்புகள்ல சீனியாரிட்டிக்கு பெரும் மரியாதை உண்டு. அது பிரகாரம் நாங்கள் எல்லாம் ஹரிபத்மன் சார் மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தோம்.
அவர் பரதம் சொல்லிக் கொடுக்கும்போது மாணவிகள் எல்லாருமே வித்தைய கத்துக்கணும்னு ரொம்ப நுணுக்கமா கவனிப்போம். பரதம் கத்துக்கும்போது இயல்பாக கை, கால்கள், இடுப்பு ஆகியவற்றின் கோணங்களும் செயல்பாடுகளும் முக்கியம்.
அப்படித்தான் ஹரிபத்மன் பரதம் சொல்லித் தரும்போது தோள்பட்டை மேல தொடுவார், உள்ளங்கையை பிடித்து விரல்கள் எப்படி இருக்கணும்னு மடிச்சுக் காட்டுவார்.

இதெல்லாம் எங்களுக்கு ஆரம்பத்துல தப்பாவே தெரியலை. ஏன்னா வித்தை கத்துக்குற ஆர்வம். எங்க முழு கவனமும் நாட்டியம் மேலதான் இருக்கும். அதுக்கும் மேல அவரை குருன்ற இடத்துலதான் நாங்க வச்சுப் பாத்தோம். அதனால அப்படி ஒரு தப்பான கான்செப்ட்டே ஸ்டூடன்ஸுக்கு தோணலை.
இப்படி போயிக்கிட்டிருக்கும்போதுதான்… திடீர்னு லீவு நாள்லயோ, அல்லது ஈவினிங்லயோ வீட்டுக்கு கூப்பிடுவாரு. குரு கூப்பிடுறாரேனு நானும் போனேன். தொடர்ந்து ப்ராக்டிஸ் பண்றியானு கேட்டார். பண்றேன்னு சொன்னேன். ஒரு நாள் விட்டா கூட பரதம் வராமப் போயிடும்னு சொன்னார்.
அப்படி ஒரு லீவு நாள்ல அவர் வீட்டுக்கு போனப்பதான் அவங்க ஃபேமிலில யாரும் வீட்ல இல்லை. வழக்கமா பிராக்டிஸ் கொடுத்தார். அப்ப அவர் கொஞ்சம் அழுத்தமாவே கைகளை பிடிச்சாரு. சில நிமிடத்துலயே அவர் வேற ஏதோ ஒரு கான்செப்ட்ல கனெக்ட் பண்ண பாக்குறார்னு புரிஞ்சது. நான் ஒரு நாள் பயந்து போய் அழுதிருக்கேன்.
அழாதே…கலை கத்துக்கும்போது இதெல்லாம் சகஜம்… குரு என்ன கேட்டாலும் கொடுக்கணும்னு சொன்னார். ஆனா நான் அதுக்கு மறுத்ததால அப்புறம்தான் அக்கறை கொண்டவர் மாதிரி நடிச்ச ஹரிபத்மனோட இன்னொரு முகத்தை நான் பாத்தேன்.

’இன்டர்னல் மார்க் என்கிட்ட இருக்கு அறியுமோ?’ னு மிரட்ட ஆரம்பிச்சார். நான் அவர் கைவைக்க என்னிக்கு எதிர்த்து நின்னேனோ அன்னிலேர்ந்து என்னை வெளியூர், வெளி மாவட்ட, வெளி மாநில பரத நாட்டிய முக்கியமான நிகழ்வுகளுக்கு என் பேரையே சேர்க்க மாட்டாரு.
கேட்டா, அவளுக்கு இன்னும் ப்ராக்டிஸ் போதலைனு நிர்வாகத்துக்கிட்ட சொல்லியிருக்காரு. இப்படியே என்னை டார்ச்சர் பண்ணினாரு” என்று கண்களில் நீர் மல்க சொல்லியிருக்கிறார் அந்த கேரளத்து மாணவி.
இதைப் பதிவு செய்துகொண்ட போலீஸ் டீம் அந்த மாணவியின் தாயாரிடமும் விசாரித்தது.
“அந்த ப்ரபசர், குட்டியை ரொம்ப டார்ச்சர் செய்திருக்கிறார். குட்டி போன் செய்து என்னிடம் அழும். படிக்கவே பிடிக்கலை, நான் இப்பவே வந்துடுறேன்னு சொல்லி அழும். நான்தான் நீ படிக்கதான போன… படிச்சு முடிச்சுட்டு வா என்றேன், பிள்ளையை தனியாக அழைத்து உடம்பில் கை வைத்து டார்ச்சர் செய்துள்ளார்.
கலையை கத்துக்கறத்துக்குதானே இவ்வளவு தூரம் தாண்டி அனுப்புறோம். குருவே இப்படி பண்ணலாமா?’ என்று அழுதுள்ளார். மாணவியிடமும் தாயாரிடமும் வாக்குமூலம் வாங்கிக் கொண்டனர் போலீஸார்.
அந்த மாணவியிடம், ‘உனக்கு நடந்தது உன்னோட நண்பர்களுக்கு தெரியுமா? உனக்கு நடந்த சம்பவத்தை நீ அவர்களிடம் அப்போதே சொல்லி இருக்கிறாயா? உன்னை மாதிரி வேறு சிலருக்கும் நடந்திருக்கிறதா?’ என்று கேட்டுள்ளனர்.
மாணவியும் ஐந்துக்கு மேற்பட்ட தனது செட் மாணவிகளின் பெயர் சொல்லி… அவர்கள் பற்றிய விவரங்களையும் கொடுத்துள்ளார். அத்தோடு இந்த ஹரிபத்மன் விவகாரம் பற்றி பேராசிரியர்களுக்கும் தெரியும் என்று சில பேராசிரியர்களின் பெயரையும் சொல்லியிருக்கிறார் அந்த கேரளத்து மாணவி.
கேரளாவில் இருந்து கனத்த இதயத்தோடு வாக்குமூலங்களை வாங்கிக் கொண்டு புறப்பட்ட போலீஸார்… அந்த மாணவி குறிப்பிட்ட வேறு சில மாணவிகளையும் சென்னை வந்து சந்தித்துள்ளனர்.
’உங்களின் அடையாளம் வெளியே தெரியாது. நீங்கள் தாராளமாக சொல்லுங்கள்’ என்று போலீஸார் அவர்களிடம் விசாரித்திருக்கிறார்கள். முன்னாள் மாணவிகள், இந்நாள் மாணவிகள் ஒன்பது பேர் மற்றும் சில பேராசிரியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

“ஹரிபத்மன் அப்படித்தான். அவர் இதை தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். பரதம் சொல்லித் தரும்போது இடுப்பில் கை வைப்பது போல தொப்புள் வரை அவரது விரலை நீட்டுவார். பரதத்தை அப்படியே தற்காப்புக் கலையாக மாற்றி ஒரு குத்து விடலாமா என தோன்றும். ஆனால் கலாஷேத்ராவில் இருந்து வெளியேற்றப்பட்டால் உலகத்தில் எந்த மேடையிலும் பரத நாட்டியம் ஆட முடியாது. அதனால்தான் அவரைப் பொறுத்துக் கொண்டோம்.
இதுகுறித்து இயக்குனருக்கு பல முறை அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக மொட்டை பெட்டிஷன் போட்டோம். ஆனால் அவர் கண்டுகொள்ளவே இல்லை” என்று கொட்டித் தீர்த்திருக்கிறார்கள் அந்த மாணவிகள்.
ஹரிபத்மன் மீது எடுக்கும் நடவடிக்கை, கலாஷேத்ராவில் வகுப்பெடுக்கும் ஒவ்வொருவருக்கும் பாடமாக இருக்கவேண்டும் என்பதுதான் அங்கே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி கொதித்த மாணவிகளின் உள்ளக் கொதிப்பாக இருக்கிறது.
-வணங்காமுடி