சிவராத்திரி மற்றும் வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வருகின்ற வெள்ளிக்கிழமை (மார்ச் 8) சிவராத்திரி மட்டுமின்றி முகூர்த்த நாளாகவும் உள்ளது. அதோடு மார்ச் 9, 10 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் வாரயிறுதியும் சேர்ந்து வருவதால், சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி,சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மேற்கண்ட மூன்று நாட்களுக்கும் சேர்த்து 1,090 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதோடு பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,360 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வரும் ஞாயிறன்று (மார்ச் 10) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்புவதற்கு வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.
-மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமலாக்கத் துறை சம்மன்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கலெக்டர்கள் மனு!