சென்னையில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் தண்ணீர் வடிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இரண்டு நாட்களாகியும் இன்னும் மழை நீர் வடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிவாரண பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (டிசம்பர் 6) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறுகையில், “இன்றைக்கு சுமார் 75 ஆயிரம் பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 372 நிவாரண முகாம்களில் 41,406 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மக்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இதுவரை 37 லட்சம் உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது மொத்தம் 206 இடங்களில் நீர் தேங்கியுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை என மொத்தம் 34 குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மோட்டார், ஜெனரேட்டர் உள்ளிட்ட தேவையான உபகரணங்கள் அண்டை மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்களுக்கு படகு மூலமாக மட்டுமில்லாமல் ஹெலிகாப்டர் மூலமாகவும் உணவு வழங்கப்படுகிறது. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 4 பேர் மற்றும் செங்கல்பட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 311 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
சென்னையில் மொத்தம் 378 குடிசைகள் முழுவதுமாகவும், 35 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 88 வீடுகள் லேசாக சேதமடைந்துள்ளன. தற்போதைய சூழலில் மின் விநியோகம் தான் மிக முக்கியம். அனைத்து பகுதிகளுக்கும் மின் விநியோகம் கொடுக்க தற்போது தயாராக இருக்கிறோம்.
ஆனால் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் கொடுத்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மின் விநியோகம் வழங்கப்படாமல் இருக்கிறது.
சென்னையில் 4 சதவிகித பகுதிகளுக்கு மட்டும் தான் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. தாம்பரத்தில் 5.64 சதவிகித பகுதிகள், திருவள்ளூரில் 7.85 சதவிகித பகுதிகளுக்கும் மட்டும் தான் மின் விநியோகம் வழங்கப்படவில்லை.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு வழக்கமாக 19 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும். ஆனால் இன்றைக்கு 14 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி குடிநீர், பிரட் போன்றவைகளும் போதுமான அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் வடிந்த பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. நாளைக்குள் அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயங்க ஆரம்பிக்கும். மொத்தம் 87 சதவீதம் பேருந்துகள் இயங்கி கொண்டிருக்கின்றன. மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கி கொண்டிருக்கிறது. நேற்றைய தினத்தை விட இன்றைக்கு சூழ்நிலை நன்றாகவே இருக்கிறது.
மற்ற இடங்களில் தண்ணீர் வடிவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
Comments are closed.