சிறையில் சக்தி ஆனந்த்… முடங்கிய MyV3Ads செயலி : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தமிழகம்

முடக்கப்பட்ட MyV3Ads செயலி இன்று (பிப்ரவரி 11) காலை முதல் செயல்பட தொடங்கிய நிலையில் புதிதாக யாரும் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளகிணறு பகுதியில் MyV3Ads என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பண மோசடியில் ஈடுபடுவதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, உரிமையாளர் சக்தி ஆனந்துக்கு ஆதரவாக கடந்த மாதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து போராட்டம் நடத்தினர்.

இது குறித்து விசாரிக்க அந்நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த்க்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.  அதன்படி கோவை மாநகர குற்ற பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக கடந்த 6-ம் தேதி நேரில் ஆஜரானார்.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 10) காலை 150-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பதற்காக சக்தி ஆனந்த் வந்தார்.

அப்போது காவல் ஆணையர் மீட்டிங்கில் இருப்பதால் புகாரை எழுதி வாங்கி கொண்டு சக காவலர்கள் அவர்களை அடுத்த வாரம் வருமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் காவல் ஆணையரை சந்தித்து விட்டு தான் செல்வோம் என்று சக்தி ஆனந்த் மற்றும் ஆதரவாளர்கள் காவல் ஆணையர் வளாகத்தில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியார் திருமணம் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து சக்தி ஆனந்த் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து  இரவோடு இரவாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சக்தி ஆனந்த்  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே நேற்று நள்ளிரவு முதல் திடீரென முடக்கப்பட்ட MyV3Ads செயலியானது இன்று காலை முதல்  மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆனால் இந்த செயலி மூலம் யாரும் இந்த நிறுவனத்தில் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது.

MyV3Ads செயலியை பொறுத்தவரை புதிய வாடிக்கையாளர்கள் சேர சேர தான் பணம் கிடைக்கும். ஆனால் தற்போது இந்த செயலியில் புதிதாக ஆட்களை யாரும் இணைக்க முடியாததால் அதனை பயன்படுத்தி வரும் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு: அரசு முக்கிய அறிவுறுத்தல்!

’ஆர்டிக்கிள் 370’ படத்திற்கு எதிராக குவியும் கண்டனம் : தயாரிப்பாளர் பதில்!

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *