Sexual harassment to five school students
மாணவிகளிடம் ஆபாச படங்கள் காண்பித்து, பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 112 மாணவிகளும், 95 மாணவர்களும் என 207 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக மகேஸ்வரன் பணியாற்றி வருகிறார்.
இவர், இடைவேளை நேரத்திலும், மதிய உணவு நேரத்திலும் மாணவிகளை அழைத்து ஆபாச படங்களை காண்பிப்பாராம். இதனை தங்களது பெற்றோரிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் மாணவிகள் இதுகுறித்து எதுவும் சொல்லாமல் கொடூரமான நாட்களை கடந்து சென்றுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி விழுப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பேச்சு போட்டிக்கு தனது பள்ளியிலிருந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை அழைத்து சென்றுள்ளார் மகேஸ்வரன். அதில் ஒரு மாணவி மதியம் சாப்பாடு எடுத்து வந்த நிலையில், இன்னொரு மாணவி சாப்பாடு எடுத்து வரவில்லை.
இதனை பயன்படுத்தி கொண்ட மகேஸ்வரன், ”பக்கத்தில் எனது நண்பர் பக்தாசலம் ஆசிரியர் வீடு இருக்கிறது. அங்கே போய் சாப்பிட்டுவிட்டு வரலாம்” என்று இரண்டு மாணவிகளையும் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மாணவிகளுக்கு செல்போனில் இருந்த ஆபாச படத்தை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அடுத்தநாள் பள்ளிக்கு சென்று அங்கு வேறு சில மாணவிகளிடமும் தவறாக நடந்துள்ளார்..
இந்த நிலையில் கடைசியாக கம்யூனிஸ்ட் சித்தாந்தம் அறிந்தவரின் மகளுக்கு தொல்லை கொடுத்துள்ளார் மகேஸ்வரன். கோபமடைந்த அந்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனால், பயந்துபோன மகேஷ்வரன் தான் தொல்லை கொடுத்த ஒவ்வொரு மாணவியின் பெயர்களை சொல்லி, ”அவர்கள் எதுவும் கேட்கவில்லை, உனக்கு என்ன திமிரா? இந்த விஷயத்தை வீட்டில் சொன்னால் என்னை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் உன்னை பெயிலாக்கிவிடுவேன், நீ ஒருவனை காதலிப்பதாக உன்னுடைய பெற்றோர்களிடம் சொல்லி அசிங்கப்படுத்திவிடுவேன்” என்று மிரட்டியுள்ளார். மேலும் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மாணவியின் அம்மா பெயரில் சத்தியமும் வாங்கியுள்ளார்.
இதனால் தனது பெற்றோரிடம் சொல்வதற்கு பயந்த அந்த மாணவி, பள்ளியில் ஆசிரியர் மகேஸ்வரனால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து டியூஷன் டீச்சரிடம் அழுதபடி கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ந்து போன டியூஷன் டீச்சர் மாணவிக்கு ஆறுதல் கூறியதோடு, உடனடியாக அவரது பெற்றோரிடம் மகேஸ்வரன் பள்ளி மாணவிகளுக்கு இழைத்து வரும் பாலியல் கொடுமைகளை கூறியுள்ளார்.
இதனால் கொதித்து போன அந்த மாணவியின் கம்யூனிஸ சித்தாந்தம் கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர். பின்னர் பிஞ்சு மாணவிகளிடம் அத்துமீறிய தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனையும் நையப்புடைத்துள்ளனர்.
தொடர்ந்து கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி புகார் கொடுத்ததை அடுத்து, தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, ”மகேஸ்வரன் மிக மோசமானவன். அவனையெல்லாம் தூக்கில் போடணும். அந்த அளவுக்கு பிள்ளைகளை கொடுமை செய்துள்ளான், இரண்டு வன்னியர் மாணவிகள், ஒரு எஸ்.சி, ஒரு முதலியார், ஒரு அருந்ததியர் மாணவி உட்பட ஐந்து மாணவிகளை தொடர்ந்து பாலியல் தொல்லை செய்துள்ளான்.
கடைசியாக பாதிக்கப்பட்ட மாணவியும் தைரியமாக சொல்லவில்லை என்றால் அந்த தமிழ் வாத்தி தொடர்ந்து பல மாணவிகளை நாசம் செய்திருப்பான்” என்று கூறியுள்ளனர்.
”இந்த சமூகத்தின் பேரழிவு. இது வெளியில் தெரிந்துள்ளது. இதுபோன்ற பல கல்வி நிலையங்களில் நடக்கும் கொடுமைகள் வெளியில் வராமல் நிறைய உள்ளன” என்கிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
INDvsSA: சூர்யகுமாரின் சூப்பர் சதம்… கடைசி போட்டியில் இந்தியா அபார வெற்றி!
வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!
Sexual harassment to five school students