பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 19 ) ரத்து செய்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு புகார்கள் அளிக்கப்பட்டன.
இந்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பாலியல் தொல்லை
கடந்த 2010 ஆம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

சட்டபிரிவில் இடமில்லை
இந்த மனுவை இன்று நீதிபதி மஞ்சுளா விசாரித்தார். அப்போது மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டுகளின் கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதால்,
தன் மீதான புகாரை விசாரிக்க சட்டப்பிரிவில் இடமில்லை என சிவசங்கர் பாபா தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்றுக் கொள்ளக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கு ரத்து
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மஞ்சுளா, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில்,
சட்டப்படியான தடை உள்ளதாக கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

பாலியல் தொல்லை என்பது தீவிரமான குற்றமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்க தயங்குவதாகவும்,
இதற்கு வெறும் அச்சம் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்வாக்கும் காரணம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
செல்வாக்கான நபர்களின் சட்ட விரோத செயல்கள் ஒரு நாள் வெளியில் வரும் போது, அந்த நபரால் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளிக்க முன்வருவது இயல்பு எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி,
அதேபோல இந்த வழக்கிலும் தாமதமாக புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!