முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இன்று (ஜூன் 16) தீர்ப்பு வழங்கியது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்தது. கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையை தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை முன்னிட்டு நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸும், கண்ணனும் ஆஜராகினர்.
விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி, ராஜேஷ் தாஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
ராஜேஷ் தாஸுக்கு உதவி செய்து பெண் எஸ்.பியை புகார் கொடுக்க விடாமல் செங்கல்பட்டில் தடுக்க முயன்ற, அப்போதைய எஸ்.பி.கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் கூறுகையில்,
“இந்த வழக்கில் 127 சாட்சிகள் பட்டியலிடப்பட்டது. 68 சாட்சிகளிடம் அரசு தரப்பில் விசாரித்தோம். 23 சான்று பொருட்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டன. இன்று காலை நீதிபதி வந்ததும், இரண்டு எதிரிகளையும் கூப்பிட்டு இந்த வழக்கில் உங்களை குற்றவாளிகளாக தீர்மானித்திருக்கிறோம்.
அதை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். இரண்டு பேரும் நாங்கள் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று கூறினர்.
இதையடுத்து நீதிபதி ஏ1 மீது இந்திய தண்டனை சட்டம் 354ஏ பிரிவின் கீழ் குற்றவாளி என்று கூறி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். அதுபோன்று இந்திய பெண்கள் வதை தடுப்பு சட்டத்தின் படியும் குற்றவாளி என்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பிரிவு 341படி எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதமும், பிரிவு 509 (1)படி வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அவர் பிணையில் வரவும் வாய்ப்பிருக்கிறது” என்று கூறினார்.
பிரியா
ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை!
”ஆதிபுருஷ்”- திரையரங்கிற்கு வந்த குரங்கு: வைரல் வீடியோ!