சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து சென்னை போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.
ஜூலை 24 ஆம் தேதி நள்ளிரவு சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவி ஒருவர் சைக்கிளில் அவரது விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதையடுத்து அந்த மாணவி கூச்சலிட்டு உதவி கேட்டு கத்தியபோது அந்த மாணவிக்கு உதவ யாரும் வரவில்லை. தானே போராடி அந்த இடத்தில் இருந்து தப்பித்து விடுதிக்குச் சென்றிருக்கிறார்.
இது தொடர்பாக அந்த மாணவி அவர் நண்பரிடம் நடந்ததை கூறியுள்ளார். நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறை தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் , ஐ.ஐ.டி நிர்வாகம் இந்த விவகாரத்தில் முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டு எழுந்தது. தொடர்ந்து காவல் துறையினரின் அழுத்தத்தின் பேரில் ஐ.ஐ.டி நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தது. அங்கு இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளில் இருக்கும் 300 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை வைத்து அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மாணவி பாதிக்கப்பட்ட அன்று பணியில் இருந்த 35 பேரிடமும் விசாரிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. வளாகத்துக்குள் மாணவ, மாணவிகள் யாரும் தனியாக செல்ல வேண்டாம் எனவும் தங்களது நண்பர்களுடன் குழுவாக செல்ல வேண்டும் எனவும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு கல்வி நிர்வாகம் இப்படி பேசுவதை சமூக வலைதளங்களில் பலர் கண்டித்து வருகின்றனர். அதேநேரத்தில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது நிர்வாகத்தின் கடமை என்றும் கூறுகின்றனர்.
இது குறித்து ஐ.ஐ.டி நிர்வாகத் தரப்பிலோ, ‘600 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த வளாகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சற்று கடினமாக உள்ளது. அதேநேரம் 100 மீட்டர் இடைவெளிக்கு ஒரு பாதுகாவலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை காவல் துறை உதவி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஐ.ஐ.டிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்-