பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் வழக்கில் இன்று தீர்ப்பு!

தமிழகம்

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2021 பிப்ரவரி 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்போதைய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கவனித்தார்.

முதல்வரின் நிகழ்ச்சி முடிந்ததும் விழுப்புரம் நோக்கி ராஜேஷ் தாஸ் காரில் சென்ற போது வழியில் அவருக்கு வணக்கம் செலுத்திய பெண் எஸ்பி ஒருவரை தனது காரில் ஏற்றிக்கொண்ட ராஜேஷ் தாஸ், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து ராஜேஷ் தாஸ் வந்த கார் உளுந்தூர்பேட்டையில் நின்றதும் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவந்த பெண் எஸ்பி அங்கிருந்து கிளம்பினார்.

இதையடுத்து பிப்ரவரி 22 ஆம் தேதி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி உள்துறை செயலாளரிடமும் தமிழக டிஜிபியிடமும் புகார் அளிக்க பெண் எஸ்பி சென்னையை நோக்கி காரில் புறப்பட்டார்.

இதையறிந்த ராஜேஷ் தாஸ் அவரை வழியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண் எஸ்பியின் காரை மறித்த, அப்போது அந்த மாவட்ட எஸ்பியாக இருந்த கண்ணன், ராஜேஷ் தாஸிடம் போனில் பேசினால் தான் அனுமதிப்பேன் என்று மிரட்டினார்.

இதன்பின் சென்னை வந்த அந்த பெண் அதிகாரி தமிழக டிஜிபியிடம் ராஜேஷ் தாஸ் மீதும், சென்னை வரும்போது தனது காரை தடுத்து நிறுத்திய அதிகாரி மீதும் புகார் கொடுத்தார்.

அப்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்த திமுக உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு டிஜிபி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கின.

தொடர்ந்து இவ்வழக்கில் பிப்ரவரி 27ஆம் தேதி விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகிய இருவர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 354, தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த சூழலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மார்ச் 18, 2021 அன்று சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநாதன் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு அரசுக்கு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்டார். இவ்வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்று விழுப்புரம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது.

இந்நிலையில் 2021ல் 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது.

இந்த சூழலில், சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பி இடையே நடந்த உரையாடல் பதிவு வாட்ஸ்அப் பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் காணவில்லை என்று விழுப்புரம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்தது.

இதை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் ஆவணங்கள் மாயமானது தொடர்பாக அதிகாரிகளுக்கு மெமோ வழங்கியதுடன் காணாமல் போன ஆவணங்களை 2022 ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தொடர்ந்து மாயமான ஆவணங்களின் நகல்களை 2022 செப்டம்பர் 6 அன்று சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

விழுப்புரம் நடுவர் நீதிமன்றம் ராஜேஷ் தாஸ், கண்ணன் ஆகியோரை ஆஜராக உத்தரவிட்டு அவர்களிடம் விசாரணை நடத்தியது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடமும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நிறைவடைந்தது.

அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கில் ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி அறிவித்தார். அதன்படி இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

இதனிடையே தன் மீதான வழக்கை எதிர்த்து ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார். தன் மீதான வழக்கில் ஒருதலை பட்சமாக விசாரணை நடத்தப்படுவதாகவும், அதனால் வழக்கை ஆந்திரா போன்ற வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

இந்த வார ஓடிடி ரிலீஸ்!

Judgment in Rajesh Das case today
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *