போதை மருந்து செலுத்தி பாலியல் பலாத்காரம் : திகில் கிளப்பும் விழுப்புரம் ஆசிரமம்

தமிழகம்

விழுப்புரம் அருகே உள்ள ஆசிரமம் ஒன்றில் ஆதரவற்ற பெண்கள் மீது குரங்குகளை ஏவி கடிக்க விடுதல், போதை பொருள் கொடுத்து பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட கொடுமைகள் நடந்தேறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள கெடார் அருகே குண்டலபுலியூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு அன்பு ஜோதி ஆசிரமம் என்ற ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் சலீம்கான் என்ற அமெரிக்க வாழ் தமிழர் தன்னுடைய மாமனார் ஜவஹிருல்லாவை(45) இந்த ஆசிரமத்திற்கு அழைத்து வந்து சேர்த்துள்ளார்.

அதன்பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரமத்திற்கு வந்து மாமாவை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அங்கு அவர் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சலீம், ’எங்கே எனது மாமா?’ என்று கேட்டதற்கு ”ஆசிரமத்தில் இடப்பற்றாக்குறை என்பதால் 53 பேரை பெங்களூருவில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பிவிட்டோம்” என்று அங்குள்ள நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

உடனடியாக பெங்களுர் சென்று பார்த்தவருக்கு அங்கு மாமனார் இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சியது. அப்போது தான் தனது மாமனாருடன் சேர்த்து 17 பேர் அந்த ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து உயர்நீதிமன்ற படியேறி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் சலீம்.

நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அன்பு ஜோதி ஆசிரமத்தில் போலீசார், வருவாய் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கடந்த 10ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முதல் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆதரவற்றோருக்கான அன்பு ஜோதி ஆசிரமம் கடந்த 17 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. மேலும், ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் உரிய முறையில் பராமரிக்காமல் சங்கிலியால் கட்டப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதைவிட கொடுமை, ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்கள், போதைக்கு உட்படுத்தி அவர்களுக்கு தெரியாமலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பது தான்.

இதுகுறித்து ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “தமிழகத்துக்கு வேலைக்காக சிறு வயதில் வந்தேன். விழுப்புரத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திவந்த என்னை மீட்ட சிலர் இந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்தனர்.

5 ஆண்டுகள் இந்த ஆசிரமத்திலேயே தங்கி இருந்தேன். என்னை சங்கிலியால் கட்டி வைத்து போதை பொருள் கொடுத்து பலராலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்” என்று கூறினார்.

மேலும், ”நான் அவர்களுக்கு இணங்க மறுத்தால் இருட்டான குகையில் தள்ளி குரங்குகளை விட்டு கடிக்க விட்டனர். என்னைப்போல பல பெண்களை ஜன்னல் கம்பிகளில் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்தனர். போதை மருந்து கொடுத்து சுயநினைவில் இல்லாதபோது அவர்களை கற்பழித்தனர்.

நான் உட்பட இங்கு பல பெண்களின் உடல் முழுவதும் ரத்த காயங்கள் உள்ளது. ஆசிரமத்திற்கு வருபவர்கள் திடீரென தடயமே இல்லாமல் காணாமல் போவார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

இவை அனைத்தையும் வீடியோ பதிவு செய்த அதிகாரிகள், சமூக நல அலுவலர் ராஜாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரமத்தைச் சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி(45), அவரது மனைவி மரியா ஜூபின்(43), மேலாளர் பிஜூ மோகன்(46) மற்றும் பணியாளர்கள் அய்யப்பன்(31), கோபிநாத்(24), மாரிமுத்து(35), சதீஷ், பூபாலன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது ஆசிரமத்தில் இருந்தவர்களை வியாபார உள்நோக்கத்துடன் வெளிமாநிலத்திற்கு கடத்தியது, மனநலம் குன்றியோர் ஆதரவற்றோரை சித்ரவதை செய்தது, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட அன்பு ஜோதி ஆசிரமத்தை மூடி சீல் வைக்கவும், அபராதம் விதிக்கவும் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஆசிரமம் மற்றும் காப்பகங்கள் உரிய அனுமதி பெற்று முறையாக செயல்பட்டு வருகிறதா என விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை வழங்கவும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரமத்தில் இருந்து இதுவரை 109 ஆண்கள் மற்றும் 33 பெண்கள் என 142 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 86 பேரை சிகிச்சை முடிந்ததும் வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

1.. 1.. 1.. வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

பி.டெக் முதலாமாண்டு மாணவர் தற்கொலை: ஐஐடியில் சாதிப் பாகுபாடா?

+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published.