Rajesh Das Sexual harassment case

பாலியல் வழக்கு : ராஜேஷ் தாஸூக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

தமிழகம்

Rajesh Das Sexual harassment case

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வரும் 29ஆம் தேதி நேரில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என விழுப்புரம் நீதிமன்றம் இன்று (ஜனவரி 24) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது,

முதல்வரின் சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு,  சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதனையடுத்து ராஜேஷ் தாஸ் இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கியது.

அதில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என்றும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.20,500 அபராதம் என்றும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் என்றும் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து,  விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இருவரும் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்தார்.

இதற்கிடையே இந்த வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராஜேஷ் தாஸின் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே விழுப்புரம் நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனு மீது விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா இன்று தீர்ப்பளிக்க இருந்தார். ஆனால் வழக்கம்போல் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகவில்லை.

இதனால் கோபமடைந்த நீதிபதி பூர்ணிமா, இந்த வழக்கில் வருகிற 29ஆம் தேதி ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி, அவர் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவரது தரப்பு வாதத்தை முன்வைக்க இதுவே கடைசி வாய்ப்பு எனவும், அன்றைய தினம் ராஜேஷ் தாஸ் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தளபதி விஜய் வாங்கிய முதல் எலெக்ட்ரிக் கார்… என்ன ஸ்பெஷல்?

திமுக எம்எல்ஏ மகன் ஜாமீன்: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *