தமிழகத்தில் சமீப நாட்களாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி குற்றம் சாட்டி வரும் நிலையில், பொதுமக்களைத் தாண்டி போலீஸுக்குள்ளேயே பகீர் பாலியல் புகார் கிளம்பியிருக்கிறது. ena exual harassment case against ips officer
பள்ளி சிறுமி முதல் பல்கலைக் கழக மாணவி வரை பலதரப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தப்பு செய்பவர்களை தட்டிக் கேட்கும் காவல்துறையில் இருக்கும் சிலரே, சக பெண் அதிகாரிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது தொடர்கதையாகி வருகிறது.
முன்னாள் ஐஜி முருகன், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது பதவியில் இருக்கும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி மீது பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை ஆணையராக இருப்பவர் மகேஷ் குமார். டிஐஜி அந்தஸ்தில் ஐபிஎஸ்-ஆக உள்ளார். இவர்தான் பாலியல் புகாரில் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலை பெண் காவலர் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் நேற்று (பிப்ரவரி 12) பாலியல் புகார் அளித்தார்.
அந்த புகாரில், “ நான் என் குடும்ப சூழ்நிலை காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். இதை அட்வான்ட்டேஜாக எடுத்துக் கொண்டு, டியூட்டியில் இல்லாதபோது, பணி இருக்கிறது என்று அழைக்கிறார். தேவையில்லாத வேலைக்கு அனுப்பி மறைமுகமாகவும் நேரடியாகவும் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்” என மகேஷ்குமாரால் தனக்கு நேர்ந்த சில கொடுமையான சம்பவங்களை குறிப்பிட்டிருந்தார்
இந்தநிலையில் பெண் காவலரின் பாலியல் புகார் குறித்து நாம் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது,
“மகேஷ் குமார் இரவு நேரத்தில் சரக்கு போட்டுவிட்டார் என்றால் பெண் அதிகாரிகளுக்கு தேவையிலாமல் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வது, வீடியோ கால் செய்வது என இம்சை கொடுத்துவிடுவார். இதனால் அவருக்கு கீழ் பணிபுரியும் பெண் போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையில் சிலர் போனை நாட் ரீச்சபளில் போட்டுவிடுவார்கள்.
மகேஷ் குமார் இங்கு மட்டுமல்ல, எங்கெல்லாம் பணியில் இருந்தாரோ, அங்கெல்லாம் இப்படிதான் நடந்துகொள்வார். அவருக்கு பணியாதவர்களுக்கு பனிஷ்மென்ட் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுவார்.
கிருஷ்ணகிரி எஸ்.பி.யாக இருக்கும் போது, இவர் மீது ஏகப்பட்ட புகார்களும், துறை ரீதியான ரிப்போர்ட்டுகளும் காவல்துறை தலைமைக்கு சென்றது.
அப்போது அதை அலட்சியப்படுத்திவிட்டார்கள். இந்த ஆட்சி வந்த பிறகு டிஜிபி சைலேந்திரபாபு இருக்கும் போதும், மகேஷ் குமார் மீது பல புகார்கள் குவிந்தது.
இப்போதுள்ள டிஜிபியிடமும் மகேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க அலர்ட் மெசேஜும் அனுப்பப்பட்டது. ஆனாலும் அதுவும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த தகவல் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருணுக்கு தெரிந்து, அவரது ஆலோசனைப்படி டிஜிபியை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறார் அந்த பெண் காவலர். இதனால்தான் மகேஷ் குமார் மீதான பாலியல் புகார் பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது” என்கிறார்கள் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் சிலரே.
1971ல் பிறந்த இவர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குரூப் 1 தேர்வு எழுதி 1999ல் டிஎஸ்பியாக பணியில் அமர்ந்தார். தொடர்ந்து ஏடிஎஸ்பி, எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றார்.
கிருஷ்ணகிரி எஸ்.பி., அடையாறு காவல்துணை ஆணையராகவும் பணியாற்றினார்.
குரூப் 1 மூலம் போலீஸ் பணிக்கு தேர்வான இவர் 2010ல் ஐபிஎஸ் ஆனார்.
டிசம்பர் 2024 வரை பெருநகர சென்னை காவல்துறையின் தெற்கு போக்குவரத்து இணை ஆணையராகப் பணியாற்றினார், பின்னர் வடக்கு போக்குவரத்து இணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இவருக்கு திருமணம் ஆகி, மனைவி இருக்கிறார். மகன் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்” என்கிறார்கள்.
சக ஆண் அதிகாரிகளே இவ்வாறு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுப்பது, பெண் அதிகாரிகளையும், பெண் போலீஸாரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. sexual harassment case against ips officer