தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியர் டாக்டர் சதீஷ்குமார் மீது மாணவிகள் பாலியல் புகார் கொடுத்திருந்த நிலையில் அவர் இன்று (செப்டம்பர் 13) சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
இதை தர்மபுரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவிகளுக்கு அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் டாக்டர் சதீஷ்குமார்,
பாலியல் தொல்லை கொடுத்துவருவதாக இரண்டாம் ஆண்டு மாணவிகள் டீன் அமுதவல்லியிடம் புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் இந்த விவகாரம் பற்றி விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார்.
விசாரணைக் குழுவினர் டாக்டர் சதீஷுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் சமரசமாக போகும்படியும் வழக்கு என்று போனால் படிப்பு வீணாய் போகும் என்றும் பேசியிருக்கிறார்கள்.
இதுபற்றி விரிவாக நேற்று (செப்டம்பர் 12) இரவு மின்னம்பலத்தில் மருத்துவ மாணவிகள் பகீர் புகார் பாலியல் டாக்டரை காப்பாற்றும் பாலிடிக்ஸ் டாக்டர்கள்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியிலேயே செப்டம்பர் 13 ஆம் தேதி தர்மபுரி மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வருகை தரும் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்கும் இப்பிரச்சினையை எடுத்துச் செல்ல மருத்துவ மாணவிகள் முயன்று வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
அதன்படியே இன்று தர்மபுரி வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மாணவிகள் சார்பில் முறையிடப்பட்டிருக்கிறது.
இதுபற்றி விசாரித்து டாக்டர் சதீஷ்குமாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்திருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
இதுகுறித்து இன்று தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஆகஸ்டு 23 ஆம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு மாணவி மருத்துவர் சதீஷ்குமார் மீது அத்துமீறல் புகார் ஒன்று தந்தார்.
அடுத்த நாளே 24 ஆம் தேதி விசாரணைக் குழுவை அமைத்தோம். அந்த குழுவில் டாக்டர் கண்மணி, டாக்டர் தண்டர் சீப், டாக்டர் சாந்தி ஆகியோர் இடம்பெற்றார்கள்.
அவர்கள் கடந்த வாரம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அந்த அறிக்கையில் டாக்டர் சதீஷ்குமாரின் அத்துமீறல் தொடர்பான விஷயங்களை குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் அந்த மருத்துவரிடம் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க கேட்டனர். அவர் 15 நாட்கள் வேண்டாம் உடனடியாக விளக்கம் அளிக்கிறேன் என்று ஒரே நாளில் தனது மறுப்பை தெரிவித்தார்.
ஆனாலும் அந்த மாணவி தந்த புகாரும், விசாரணை நடத்தியவர்கள் தந்த அறிக்கையும் ஒன்றாக இருப்பதால் மருத்துவர் சதீஷ்குமார் தவறிழைத்திருப்பது உறுதியாகிறது.
இது கொஞ்ச நேரத்துக்கு முன் எனது கவனத்துக்கு வந்ததும், அவர் உடனடியாக தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
துறை ரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மருத்துவர் பணி என்பது மக்களை காக்கும் மகத்தான பணி.
அந்த பணியில் யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு மருத்துவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
–வணங்காமுடி
தமிழகத்துக்கு மேலும் ஆறு மருத்துவக் கல்லூரிகள்: டெல்லி செல்லும் மா.சுப்பிரமணியன்