ஹரியானாவில் கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் இரண்டு பேரிடம் திருவண்ணாமலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 11 ம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களில் மெஷினை உடைத்த கொள்ளையர்கள், சுமார் 72 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
போலீசார் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக ஏடிஎம்-ல் பணத்தை திருடியதும் மெஷினுக்கு தீ வைத்துவிட்டுத் தப்பியுள்ளனர்.
ஓரே நேரத்தில் 4 ஏடிஎம்களில் ரூ.72.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,
இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
400-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது, அவர்களது வண்டியின் எண்ணைக் கொண்டு விசாரணையைத் தொடங்கிய போலீசார் கர்நாடகா, குஜராத், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 பேரிடம் விசாரணை விசாரணை நடத்தினர்.
திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவத்தில் ஏடிஎம் தொழில்நுட்பம் தெரிந்த 6 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. குறிப்பாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மேவாட் கொள்ளையர்களே நிகழ்த்தியிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக கொள்ளையர்கள் தப்பி சென்ற ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார் கேஜிஎஃப் பகுதியில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நபரை கைது விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் இருவர் விமானம் மூலம் ஹரியானா தப்பி சென்றது உறுதியானதை அடுத்து, திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானா மாநிலம் மேவாட் கொள்ளை கும்பல் தலைவனான முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகியோரை வடக்கு மண்டல ஐஜி யாக உள்ள கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (பிப்ரவரி 17) கைது செய்தனர்.
கைதானவர்களிடம் இருந்து ஒரு வாகனம் மற்றும் 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 69.5 லட்சம் ரூபாய் எங்கே என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட 2 பேரும் அதிகாலை திருவண்ணாமலை அழைத்து வரப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்,
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தவும், விசாரணைக்கு பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முக்கிய குற்றவாளியான இருவர் கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து, ஹரியானாவில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கைதானவர்களின் கூட்டாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோனிஷா
இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!
குடியரசுத் தலைவர் தமிழக பயண விவரம் இதுதான்!