தமிழகத்தில் பொதுவாக அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கும். அதற்கு முந்தைய மாதமான செப்டம்பர் இறுதியில் லேசான மழை பெய்ய தொடங்கும்.
ஆனால் இந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் வெயில் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
கடந்த சில தினங்களாகச் சென்னையில் மட்டும் ஆங்காங்கே மழை பெய்தது. நேற்று மாலை தென் சென்னை பகுதிகளான அடையார், பெசன்ட் நகர், வேளச்சேரி போன்ற இடங்களில் மழை தூறியது.
ஆனால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் எப்போதும் போல் வெயில் அடித்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தூத்துக்குடியில் 38.7° செல்சியஸும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 20.2° செல்சியஸுமாக வெப்பநிலை பதிவானது.
இந்த நிலையில் இன்று(செப்டம்பர் 23) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 24 மணி நேரத்தில், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
செப்டம்பர் 23 முதல் 29 வரை, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்
செப்டம்பர் 23 முதல் 27 வரை , மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
இன்று, தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்
இன்று மற்றும் நாளை, தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கேரள கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஒரு மக்கள் பிரதிநிதி இப்படியெல்லாம் பேசலாமா? : சிவி சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
கால்பந்து விளையாட்டில் மகனுக்கு ரெட் கார்டு… தந்தைக்கு ‘காப்பு’!
லட்டுவில் கலப்படம்: திருப்பதி கோயிலில் மகா சாந்தி யாகம்!