அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்பளித்த நிலையில்… மூன்றாவது நீதிபதி இன்று (ஜூலை 5) தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 14ஆம் தேதி அதிகாலை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில்… அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான இடைக்கால உத்தரவாக செந்தில்பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்குப் பிறகு இவ்வழக்கை தொடர்ந்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (ஜூலை 4) தீர்ப்பளித்தது.
அதில் நீதிபதி நிஷா பானு, ’செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதமானது. அவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. அவர் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்’ என தீர்ப்பளித்தார்.
அதே நேரம் அமர்வின் இன்னொரு நீதிபதி பரத சக்கரவர்த்தி, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார். “காவேரி மருத்துவமனையில் இன்னும் பத்து நாட்கள் செந்தில் பாலாஜி இருக்கலாம். அதன் பிறகு அவர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும். செந்தில் பாலாஜி முழுமையான குணமடைந்த பிறகு அவரை அமலாக்கத்துறை கஸ்டடி எடுத்து விசாரிக்கலாம்” என்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி மாறுபட்ட தீர்ப்பளித்தார்.
இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகளை அளித்த நிலையில் இருவருமே இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கபூர்வாலாவுக்கு பரிந்துரை செய்தனர்.
இதற்கிடையே அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது… இவ்வழக்கில் மூன்றாவது நீதிபதியை விரைவாக நியமிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது.
இந்த சூழலில் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி. கார்த்திகேயனை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று (ஜூலை 5) காலை நியமித்துள்ளார்.
மூன்றாவது நீதிபதி முன்பு வழக்கு இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு வரலாம் என்று தெரிகிறது. அப்போது ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் எடுத்து வைத்த வாதங்களையே இரண்டு தரப்பும் எடுத்து வைக்கும். அதன் பிறகு மூன்றாவது நீதிபதி அளிக்கும் தீர்ப்பை பொறுத்து, பெரும்பான்மை அடிப்படையில் இந்த வழக்கின் முடிவு இருக்கும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள் வட்டாரங்களில்.
வேந்தன்