அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 14) தள்ளுபடி செய்துள்ளது.
அமலாக்கத்துறை சோதனை மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அனுமதி வழங்கியது.
அனுமதி வழங்கிய அன்றைய தினமே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை 5 நாட்கள் விசாரணை நடத்தியது.
தொடர்ந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாலை 3 மணிக்கு செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, செந்தில் பாலாஜி மீது 120 பக்க குற்றப்பத்திரிகையும், 2,700 பக்கங்களுக்கு மேலான ஆவணங்களையும் ஒரு பெரிய பெட்டியில் கொண்டு வந்து அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
பின்னர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 14) அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ”அமலாக்கத் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் 120 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகை மற்றும் அது குறித்த 2,700 பக்கங்களுக்கும் அதிகமான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த ஆவணங்களை வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கு தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட விசாரணை, தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி தனது முன்னிலையில், அமலாக்கத்துறை தரப்பிற்கு மனு குறித்த தகவலை தெரிவிக்க செந்தில் பாலாஜி தரப்பிற்கும், நகல்களை மனுதாரருக்கு வழங்க அமலாக்கத்துறை தரப்புக்கும் அறிவுறுத்தல் வழங்கினார்.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில் அமலாக்கத்துறையிடம் ஆவணங்களைக் கேட்ட மனுவை வலியுறுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை வலியுறுத்தாததன் காரணமாக செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
மோனிஷா
டிஜிட்டல் திண்ணை: நமுத்துப் போன நடைபயணம்… ஆளுநர் மீது அண்ணாமலை புகார்!
ஆளுநர் விருந்து ஒத்திவைப்பு… கனமழையா? கண்டன மழையா?