அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்ற 3ஆவது நீதிபதி கார்த்திகேயன் இன்று (ஜூலை 7) உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து அவரது மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த 4ஆம் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான என்.ஆர்.இளங்கோ, இந்த வழக்கை வரும் ஜூலை 11ஆம் தேதியும், (செவ்வாய்கிழமை), அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா 8ஆம் தேதியும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி இன்று காலையில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பில் தங்களுக்கு எதிரான பதிவுகளுக்கு எதிர்வாதம் செய்ய அனுமதி அளிக்கவேண்டும் என்று இருதரப்பு வழக்கறிஞர்களும் புதிய மனுவை தாக்கல் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து இன்று மதியம் தொடங்கிய விசாரணையில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்களது வாதத்தை முன் வைத்தனர்.
செந்தில்பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இரு நீதிபதிகளும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து விளக்கி இருக்கிறோம்” என்று வாதிட்டார்.
அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”41ஏ இந்த வழக்கிற்கு பொருந்துமா என்பது குறித்து இரு நீதிபதிகளும் விவாதிக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
அப்போது நீதிமன்ற காவல் குறித்த உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகளை இரு தரப்பு வழக்கறிஞர்களும் சுட்டிக்காட்டினர்.
அவற்றைக் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், ”இரு நீதிபதிகளும் எந்தெந்த கருத்துகளில் மாறுப்பட்டுள்ளார்களோ அதுகுறித்து மட்டும் வாதிடலாம். அதை தவிர்த்து உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரான மேற்கோள்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது. அதனை தவிர்த்து எந்தவிதமான புதிய வாதமும் முன்வைக்க கூடாது.” என்று அறிவுறுத்தினார்.
இதனை இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை வரும் 11, 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆளுநருக்கு கடிதம்: ஆதாரத்தை வெளியிட்ட தமிழக அரசு
இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ்… மார்க்கை எச்சரித்த மஸ்க்