அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை (ஜூன் 21) அதிகாலை 4 மணிக்கு காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது அவரது இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற உத்தரவின் பேரினில் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு பரிசோதனைகள் பணிகள் தொடங்கின.
இந்நிலையில் நாளை அதிகாலை 4 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் எனும் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரியுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளை பட்டியலிடப்பட்டுள்ளன.
இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.
கிறிஸ்டோபர் ஜெமா