தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூலை 11) மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான வெங்கட்ரமணியை சந்தித்து பேசியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல் போக்கு இருந்து வருகிறது. இது அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் மேலும் அதிகரித்துள்ளது.
அமலாக்கத் துறை பிடியில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து கடந்த ஜூன் 30ஆம் தேதி நீக்கிய ஆளுநர் 4 மணி நேரத்துக்குள்ளாகவே அந்த உத்தரவை நிறுத்தி வைத்தார்.
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை பெறும்படி கூறியிருக்கிறார். எனவே தன்னிடம் இருந்து மறு கடிதம் வரும் வரை இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று ஆளுநர் ரவி விளக்கமளித்திருந்தார்.
ஆளுநரின் செயலுக்குத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆளுநர் ரவி கடந்த 8ஆம் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியதோடு, ‘இது காரணத்தோடு கூடிய சந்திப்பு’ என்று கூறியிருந்தார்.
ஆளுநர் அமித்ஷாவை சந்தித்த அடுத்த நாள் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு 19 பக்கம் கொண்ட கடிதத்தை எழுதினார். அதில் செந்தில் பாலாஜி விவகாரம் பற்றி குறிப்பிட்டதோடு, ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு ஆர்.என்.ரவி தகுதியானவர் என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில் டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூலை 11) மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணியை சந்தித்ததாகவும், அப்போது செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று ஆலோசனை நடத்தியதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலையும் அவர் சந்தித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
”கலைஞரின் தொண்டுகள் பாடத்திட்டங்களில் கொண்டு வரப்படும்”- பொன்முடி
காமெடியாக வாய்ப்பு கேட்ட யோகி பாபு.. சீரியசான தோனி
நெல்லையில் கொடூரம் : தந்தையை அடித்து கொன்ற மகன்!