Pichandi

செஞ்சிக் கோட்டையில் ரோப் கார் வசதி: துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி

தமிழகம்

செஞ்சிக் கோட்டை பகுதியில் ரோப் கார் வசதியினை தமிழக முதல்வர் உடனடியாக அமைக்க உரிய கவனம் செலுத்தி ரோப் வசதி ஏற்படுத்தி தருவார் என்று  தமிழக சட்டமன்றத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உறுதியளித்துள்ளார்.    
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் தொல்லியல் புகைப்படக் கண்காட்சி, புத்தகம் வெளியீடு, விருது வழங்குதல் மற்றும் கருத்தரங்கு இரு நாள் நிகழ்ச்சி தொடக்க விழா செய்யாறில் நேற்று (ஜூலை 31) நடைபெற்றது.
செய்யாறு பகுதியில் வரலாற்றில் அத்தி, பிரம்மதேசம், கூழமந்தல், குரங்கணில் முட்டம், சீயமங்கலம், வந்தவாசி பகுதியில் வெண்குன்றம், எறும்பூர் ஆகிய ஏழு நூல்களை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வெளியிட்டு தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன், நூல் ஆய்வாளர் விளாரிப்பட்டு ச.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, “வரலாற்று ஆய்வுகள் நமது நாட்டின் கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை, வாணிபம் உள்ளிட்ட அரிய தகவல்களை மக்களுக்கு எடுத்துக் கூறும் பெரிய தொண்டாகும். வரலாற்று ஆய்வாளர்களின் உழைப்பினை நாம் தலைவணங்கி பாராட்டிட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஜவ்வாது மலையில் குள்ளர் குகை 2000 ஆண்டுகளுக்கு பழமையானது வரலாற்று ஆய்வுகளினால்தான் நாம் அறிய முடிகிறது. செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுக்காவில் பிரம்மதேசத்தில் ராஜேந்திர சோழன் இறுதி காலத்தில் வாழ்ந்ததை வரலாறுகளின் மூலம் நாம் அறிகிறோம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், செய்யாறு திருவத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் பல அரிய வரலாற்று தகவல்களை அறிய முடிகிறது. ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹாலின் பெருமைகளை நாம் வியந்து பார்க்கிறோம். ஆனால் அருகில் இருக்கும் செஞ்சிக் கோட்டையின் வரலாற்றினை பார்ப்பதில்லை.
செஞ்சி கோட்டை பகுதியில் ரோப் கார் வசதியினை தமிழக முதல்வர் உடனடியாக அமைக்க உரிய கவனம் செலுத்தி ரோப் வசதி ஏற்படுத்தி தருவார்” என்று பேசினார்.

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *