கிச்சன் கீர்த்தனா : சீனியர் சிட்டிசன்ஸ்: எதைச் சாப்பிடுவது… எதைத் தவிர்ப்பது?
முதியோர் சிலருக்கு அனைத்தையும் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் சாப்பிட்ட பின் சிரமப்படுவார்கள்.
சில உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ளும். சில உணவுகளை ஏற்றுக்கொள்ளாது. இப்படிப்பட்ட நிலையில் சீனியர் சிட்டிசன்ஸ் எதைச் சாப்பிடுவது… எதைத் தவிர்ப்பது?
“சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவு உணவை எடுத்துக்கொள்ளாமல் அவ்வப்போது இடைவெளிவிட்டு சிறிது சிறிதாக உணவு எடுத்துக்கொள்ளலாம். இடையிடையே மோர் குடிக்கலாம்.
அன்றாட உணவில் இட்லி, தோசை, பொங்கல், சாதம், சப்பாத்தி என அரிசி, கோதுமை போன்றவற்றையே அதிகம் உண்ணக் கூடாது.
சிறுதானிய உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகளை அளவோடு சேர்க்க வேண்டும். கீரைகளை இரவு உணவில் தவிர்க்க வேண்டும்.
பலர் ஐம்பது வயதைக் கடந்தாலே நடைப்பயிற்சி போதும் என்று நினைத்துவிடுகிறார்கள். நடைப்பயிற்சியுடன் எளிய உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சிகளைச் செய்யலாம்.
தளர்ந்துவரும் தசைகள் ஓரளவு உறுதியாக இருப்பதற்கும், கொழுப்புச் சத்து அதிக அளவு சேராமல் இருப்பதற்கும் இது உதவும்.
டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது என்று வீட்டுக்குள்ளே அடைந்துவிடாமல் காலை 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள், மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் சூரிய ஒளி படும் இடத்தில் அமரலாம்.
இதனால் வைட்டமின் டி சத்து கிடைப்பதோடு சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
உணவில் ருசிக்காக மட்டும் இல்லை, உடலின் ஆரோக்கியத்துக்கும் உப்பு அவசியத்தேவை.
உப்பை அளவுக்கு அதிகமாக உண்ணும் சில முதியவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புண்டு.
ஆகையால், உடலில் எந்த நோய் இல்லாமல் இருந்தாலும் உப்பின் அளவை சிறிது குறைத்து உண்ணுவது நல்லது” என்கிறார்கள் முதியோர் நல மருத்துவர்கள்.
கிச்சன் கீர்த்தனா: அஜீரணமா… எந்த உணவை எடுத்துக்கொள்வது, எதைத் தவிர்ப்பது?