சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2017 இன் அமர்வு விதி 5(1) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழகத்தின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக எம்.அஜ்மல் கான் நியமனம் செய்யப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

1965-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அஜ்மல் கான் பிறந்தார். 1991- ஆம் ஆண்டு சென்னை சட்டப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப்படிப்பு முடித்த அஜ்மல் கான், 1994-ஆம் ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் 2004-ஆம் ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.