புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் செய்யப்பட்ட, தமிழர்களின் நீதி பரிபாலன முறையின் அடையாளமான செங்கோலை நிறுவுகிறார் என்பது தமிழர்களுக்கு பெருமை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனை வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,”புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாடு ஆதினங்கள் வழங்கும் சோழர்களின் செங்கோல் இடம்பெறும் . நேருவிடம் திருவாவடுதுறை ஆதினம் கொடுத்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது”என்றார்.
இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் செய்யப்பட்ட, தமிழர்களின் நீதி பரிபாலன முறையின் அடையாளமான செங்கோலை நிறுவுகிறார் என்பது தமிழர்களுக்கு பெருமை.
அதற்காக எனது மனமார்ந்த நன்றிகள் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (மே25) கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “நீதி வழுவாமை, மக்களுக்கு நல்லதை எடுத்துச்செல்வதில் தமிழ்நாட்டு அரசர்கள் உலகிற்கே வழிகாட்டி இருக்கிறார்கள். அவர்கள் செங்கோல் எந்த விதத்திலும் சாய்ந்து விடாமல் அரசாண்டார்கள்.
அது மட்டுமின்றி இதற்கு பெரிய சரித்திரம் இருக்கிறது. 1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்ற உடன் இந்த அதிகாரத்தை எப்படி பகிர்வது என்று கேள்வி எழுந்தது.
இங்கே இருந்த ஆதினம் ஒரு செங்கோல் கொடுத்து இந்த அதிகார பகிர்வை ஏற்படுத்தலாம் என்று சொன்னதன் காரணமாக அன்று 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோல் கொடுக்கப்பட்டது. ஆனால் வழிமுறையாக அதன் பெருமை பேசப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அது பேசப்படாமல் மறைக்கப்பட்டது.
தற்போது பிரதமர் மோடி தமிழ்நாட்டு அரசர்களின் செங்கோலின் மாண்பை புரிந்து கொண்டுள்ளார். அந்த செங்கோலின் மேல் நந்தி அதற்கு கீழ் மகாலட்சுமி அதற்கு கீழே கொடி உள்ளது.
நந்தி என்பது நீதி வழுவாமை , மகாலட்சுமி என்பது நிதிக்கு, கொடி என்பது நாடு என்றும் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக. இது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதற்காக எனது மனமார்ந்த நன்றிகள்”என்றார்.
மேலும், ”தமிழ்நாட்டில் இருந்து நமது நாடாளுமன்றத்தை அலங்கரித்து…உலகம் முழுவதும் நமது கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக செங்கோல் இருக்கும் என்றார்.
நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், குடியரசுத்தலைவரை கூப்பிடாமால் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நடக்க உள்ளதாக கூறுபவர்கள் யார்?
பழங்குடி இனத்தை சேர்ந்த அவருக்கு வாக்களிக்காமல் அவருக்கு எதிராக வாக்களித்துவிட்டு குடியரசு தலைவராக அவரை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு சின்ன முயற்சியை கூட செய்யாதவர்கள் இன்று பொங்குகிறார்கள். இவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தெலங்கானாவில் மிகப்பெரிய சட்டமன்றம் திறந்த போது கூட எனக்கு அழைப்பு விடுக்கவில்லை”என்று தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மலேசியா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்
செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை: நிர்மலா சீதாராமன்