மெரினா பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்த பெண்ணை, ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் நல்வழிப்படுத்தி அவருக்கு நடமாடும் டிபன் கடை அமைத்துக் கொடுத்துள்ளார்.
சென்னை ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயது பாலம்மாள்.
இவர் அரசு மதுபானங்களை மொத்தமாக வாங்கி இரவு நேரங்களில் மெரினா கடற்கரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்தார்.
பாலம்மாள் மீது ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி, மெரினா உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
பலமுறை கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த வழக்கில் பாலம்மாளை கைது செய்தாலும், அவர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மதுபானங்களை விற்பனை செய்து வந்தார்.
இதையடுத்து ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணராஜ், பாலம்மாளை அழைத்து மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு பதில், ‘ஏதாவது உனக்குத் தெரிந்த தொழில் அமைத்துக்கொடுத்தால் குற்றங்களில் ஈடுபடாமல் இருப்பியா?’ என்று கேட்டுள்ளார்.
அதற்கு முதலில் பாலம்மாள், ‘எனக்குத் தெரிந்து தொழில் ஒன்றுதான் சார். ஒரு மதுபாட்டில் விற்றால் எனக்கு 30 ரூபாய் கிடைக்கும், ஒரு நாளைக்கு 50 முதல் 100 மதுபாட்டில்கள் விற்பனை செய்வேன்’ என்று கூறியுள்ளார்.
உடனே இன்ஸ்பெக்டர், ‘உனக்கு திருந்தி வாழ ஒரு வாய்ப்பு ஏற்பாடு செய்து கொடுகிறோம், இனி மதுபானம் விற்பனை செய்தால் வெளியே வராத வழக்கில் கைது செய்துவிடுவோம்’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதன் பிறகு பாலம்மாள், ‘எனக்கு டிபன் கடை அமைத்துக் கொடுத்தால் இனி நான் மதுபானங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் இணைந்து, நடமாடும் சைக்கிள் மூலம் டிபன் கடை அமைத்து தர ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
மேலும், அதற்கு தேவையான சைக்கிள், கேஸ் ஸ்டவ், அரிசி மற்றும் பாத்திரங்கள், மளிகை பொருட்கள் மொத்தமாக வாங்கி, பாலம்மாள் மற்றும் அவரது மகள் பவானியிடம் கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு பாலம்மாள், ‘இனி நான் எந்த குற்றங்களிலும் ஈடுபட மாட்டேன். டிபன் கடை மூலம் நான் உழைத்து சாப்பிடுவேன்’ என்று ஐஸ்அவுஸ் போலீஸாரிடம் உறுதி அளித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை நல்வழிப்படுத்தி அவருக்கு டிபன் கடை அமைத்துக் கொடுத்த ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணராஜ் மற்றும் போலீஸாருக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜ்
டிஜிட்டல் திண்ணை: சனாதன சர்ச்சை… உதயநிதியை கைது செய்ய டெல்லியில் ஆலோசனை!
சனாதனவாதிகள் உள்ள கூட்டணியிலிருந்து வெளியேறுவீர்களா? திமுகவுக்கு கஸ்தூரி கேள்வி!
நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்கிறதா?: மத்திய அமைச்சர் பதில்!