வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் நடைபெறும் சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணையைச் சேர்ந்த இளவரசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், “படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணம் செய்து கொண்ட நபருடன் அப்பெண்ணுக்கு வாழ விருப்பமில்லை. அந்தப் பெண் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
இந்து திருமண திருத்தச் சட்டத்தின் படி அவருக்கும் எனக்கும் திருப்பூரில் எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்தது. ஆனால் அப்பெண்ணை அவரது தந்தை கடத்திச் சென்று விட்டார்.
அவருக்கு 21 வயது ஆகிறது. எனது மனைவியை அவரது குடும்பத்தினர் கௌரவ கொலை செய்யவும் வாய்ப்புள்ளது என்பதால், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் கடந்த மே மாதம் விசாரித்தனர்.
அப்போது தமிழக அரசு சார்பில், “இந்தப் பெண்ணை கடத்தியதாக ஏற்கனவே மனுதாரர் மீது புகார் இருக்கிறது. விசாரணையின் போது இப்பெண் ஏற்கனவே திருமணம் செய்த நபருடன் செல்ல சம்மதித்தார். அதன் அடிப்படையில் அந்த நபருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இதனை மறைத்து மனுதாரர் இளவரசன் இங்கு மனு தாக்கல் செய்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், “இளவரசன் மற்றும் அந்தப் பெண் இடையே திருமணம் நடந்ததற்கு ஆதாரமாக சுயமரியாதை திருமண சான்றிதழை திருப்பூரில் உள்ள அம்பேத்கர் சுயமரியாதை திருமண மையம் சார்பில் வழக்கறிஞர் கனகசபை மற்றும் சிலரது பெயரில் கையெழுத்திட்டு வாங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று சான்றிதழ்கள் வழங்க வழக்கறிஞர்களுக்கு உரிமை இல்லை. இது சட்டவிரோதமானது.
எனவே கனகசபை மற்றும் திருமணத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்.
அதேசமயம் இதுபோல தமிழகத்தின் பிற பகுதிகளில் திருமணம் நடத்தி வைத்து சான்றிதழ் வழங்கும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர். இளவரசன் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து இளவரசன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று (ஆகஸ்ட் 28) நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் அமர்வு விசாரித்தது.
அப்போது இளவரசன் தரப்பில், “இரு இந்துக்கள் இடையே உறவினர்கள் முன்னிலையில் அல்லது நண்பர்கள் முன்னிலையில் அல்லது பிற நபர்கள் முன்னிலையில் நடைபெறக்கூடிய கல்யாணம் தான் திருமணம் என்று இந்த திருமண சட்டம் கூறுகிறது ”என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுப்பது அடிப்படை உரிமை என்று கூறி இந்து திருமண சட்டத்தின்படி வழக்கறிஞர்கள் முன்பு நடைபெற்ற திருமணம் செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்தது.
மேலும் வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் நடைபெறும் சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
பிரியா
Comments are closed.