விடுமுறை தினத்தில் மாணவியை வரச் சொன்ன, சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் கைது!

Published On:

| By Prakash

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், பாலியல் புகாரில் இன்று (ஜூலை 25) பதிவாளரும், பேராசிரியருமான ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கூடுதல் பதிவாளர் கோபி. இவர் வேதியியல் துறை பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவி ஒருவரை, விடுமுறை தினத்தில் ஆய்வறிக்கை சரிபார்க்க வேண்டும் என பேராசிரியர் கோபி, கல்லூரிக்கு அழைத்ததாகவும், அப்போது அவர், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாணவி சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், கோபியை, இன்று (ஜூலை 25) கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சில மாணவர்கள் வந்து தன்னை தாக்கியதாகவும் கோபியும் புகார் ஒன்றை அளித்துள்ளாராம். அதன்பேரிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஜெ.பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel