முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 22) மதுரை செல்ல இருக்கிறார்.
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவால் மதுரை திருமங்கலம் அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (செப்டம்பர் 21) சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சேடப்பட்டி முத்தையா 1977, 1980, 1984, 1991 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தவர்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் வென்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அமைந்த அரசில் கப்பல் மற்றும் போக்குவரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
தொடர்ந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த இவர், 2006ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார்.
திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்த நிலையில்தான் இன்று காலமானார். அவருடைய மறைவு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில்,
‘தமிழக அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.
கடந்த 2006ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் முன்னிலையில் திமுகவில் தம்மை இணைத்துக்கொண்ட சேடப்பட்டி முத்தையா, அப்போது முதல், கட்சியின் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தொடர்ந்து பங்காற்றி வந்தார்.
அண்மையில் மதுரை சென்றிருந்தபோது, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தேன்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் மறைவுற்ற செய்தி, தற்போது வந்தடைந்து வேதனையைத் தந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சேடப்பட்டி முத்தையாவின் சொந்த ஊரான மதுரை, சேடப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் அவரது இறுதிச்சடங்கு நாளை (செப்டம்பர் 22) நடைபெற உள்ளது.
அவரது இறுதிச்சடங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கலந்துகொள்ள இருக்கிறார். அவருடன் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க இருக்கிறார்கள்.
ஜெ.பிரகாஷ்
டிஜிட்டல் திண்ணை: திமுகவுக்கு பன்னீர் கொடுத்த தேர்தல் நிதி! அமித் ஷாவிடம் எடப்பாடி சொன்ன ரகசியம்!
பரம்பிக்குளம் அணையில் உடைப்பு: கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!