ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அருகே பெண் பக்தர்கள் உடை மாற்றும் தனியார் இடத்தில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவி ஒருவர், குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கு தோஷங்களை கழிக்கக்கூடிய அக்னி தீர்த்த பகுதியில் கடலில் நீராடிவிட்டு, கோயில் அருகில் உள்ள தனியார் நபர்கள் நடத்தி வரும் தண்ணீர் தொட்டி (குளிக்கும் இடம்) மற்றும் ஆடை மாற்றும் இடத்திற்கு சென்று உடை மாற்றியிருக்கிறார்.
அப்போது அங்கு பொருத்தியிருந்த ரகசிய கேமராவை கண்டறிந்து அதிர்ச்சியான மாணவி, பதற்றத்துடன் சென்று கோயில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் பேரின் இன்ஸ்பெக்டர் முருகேசன், எஸ்.ஐ உக்கிரபாண்டி இருவரும் ஸ்பாட்டுக்கு சென்று ஆராய்ந்ததில் அங்கு பொருத்தப்பட்டிருந்த ஒரு ரகசிய கேமராவை பறிமுதல் செய்தனர்.
அந்த கேமராவை பொருத்திய அந்த கடையை நடத்தி வந்த ராஜேஷ் குமார் மற்றும் அவருடைய நண்பர் மியான் மைதீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் விசாரணை அதிகாரிகளிடம் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தையும், அங்குநடந்த சம்பவத்தை பற்றியும் கேட்டோம்.
“ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு பெரும்பாலும் வரக்கூடியவர்கள் பிரம்ம ஹத்திதோஷம் கழிக்க வருவார்கள்.
அதாவது, ராமர் ராவணனை வதம் செய்துவிட்டு அந்த பாவ தோஷத்தை கழிக்க அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு 21 நாழி கிணறுகளில் தீர்த்தங்களை எடுத்து குளித்துவிட்டு, சிவனுக்கு பூஜை செய்தார்.
அதனால் இங்குள்ள பூர்வ ஜென்ம பாவங்கள், ஜென்ம ஜென்ம பாவங்கள் இருப்பவர்கள் இங்கே வந்து தோஷத்தை கழிப்பார்கள். அப்படியானால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும், எதிரிகள் விலகி போவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
அப்படிதான் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினம்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள்.
இந்த கடலில் குளிப்பவர்கள், உப்பு தண்ணீருடனும் நனைந்த உடையுடனும் கோயிலுக்குள் போக முடியாது என்பதால் கோயில் அருகில் தனியார் நபர்கள், தண்ணீர் தொட்டிகளும், பெண்கள்/ஆண்கள் ஆடை மாற்ற தனி தனியாக இடம் வைத்துள்ளனர்.

ஒரு நபருக்கு 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூல் செய்வார்கள். அப்படிதான் செந்தில் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை ராஜேஷ்குமார் என்பவர் மாதம் 30,000 வாடகைக்கு நடத்தி வருகிறார்.
இந்த கடலில் நீராடிவிட்டு தனது இடத்திற்கு குளிக்கவும், ஆடை மாற்றவும் வரக்கூடிய பெண்களை வக்கிரமாக பார்த்து வந்த ராஜேஷ், கடந்த மூன்று மாதமாக பெண்கள் ஆடை மாற்றும் இடத்தில் ரகசிய கேமராவை பொறுத்தி, இரவு நேரங்களில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டு பெண்கள் ஆடை மாற்றும் காட்சிகளை பார்த்து ரசித்து, எச்சை ஆசைகளை தீர்த்து வந்துள்ளார்.
அந்த வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
புகார் கொடுத்த மாணவியிடம் எப்படி கேமரா இருந்ததை கண்டுபிடித்தீர்கள் என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.
அந்த மாணவி, நான் ஐஐடியில் படிக்கிறேன். பல விதமான டிடெக்டர் ஆப் கள் உள்ளன. பாதுகாப்புக்காக என் போனிலும் ஒரு டிடெக்டர் ஆப்பை டவுன்லோடு செய்து வைத்துள்ளேன். அதன்மூலமாகத்தான் கண்டுபிடித்தேன்.
இதுபோன்று ரகசிய கேமராக்கள் வைத்து வீடியோ பதிவு செய்பவர்கள், வேறொருவர் முகத்துடன் பொருத்தி மார்பிங் செய்யவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இதை கேட்ட போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் இதுபோன்று வியாபார நோக்கத்துடன் தவறு செய்துள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.
இந்தசூழலில் ராமநாதபுரம் டிஎஸ்பி சாந்தமூர்த்தி, “இனி மாதம் ஒரு முறை விடுதிகள், தனியார் உடை மாற்றும் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகளில், இதுபோன்று பெண்கள் உடைமாற்றும் இடங்களில் போலீசார் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
call,smsக்கு தனி ரீசார்ஜ்- ட்ராய் உத்தரவு : அதிர்ச்சியில் டேட்டா நிறுவனங்கள்!