இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (டிசம்பர் 29) போராட்டம் நடத்தி வருகின்றனர். கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டத்தால் 40க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்பும் பின்பும் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பதாக பல ஆண்டுகளாக புகார் இருந்து வருகிறது.
31.05.2009 வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. இதையடுத்து 1.6.2009 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.5,200 என குறைத்து அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் குறைகிறது.
ஒரே பணி, கல்வி தகுதி என அனைத்தும் சமமாக இருந்தும் ஊதியத்தில் முரண்பாடு இருப்பது நியாயம் இல்லை என பல ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்று அரசு தரப்பில் எழுத்து பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால் உத்திரவாதம் அளித்தபடி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் 2018 ஆம் ஆண்டு மீண்டும், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த ஆண்டும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் கடந்த 27ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டம் குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். இது தொடர்பாக முதல்வர் உத்தரவாதம் அளிக்கும் வரையில் எத்தனை நாட்கள் ஆனாலும் எங்களது போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ,”இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் அரசு நிதி நிலையுடன் தொடர்புடையது. ஆசிரியர்களின் கோரிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. தேர்தல் அறிக்கைகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதுபோன்று இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றி தரப்படும்” என்று கூறியுள்ளார்.
பிரியா
உஸ்பெகிஸ்தான்: குழந்தைகளின் உயிரை பறித்த இந்திய மருந்து!
முடங்கிய ட்விட்டர்: பயனர்கள் அவதி!